உள்நாடு

அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசாங்கத்தினால் நடைமுறைப் படுத்தப் பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை இடையிடையே தளர்த்துவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது.

அவ்வாறு இடையிடையே ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் பிரதேசங்களில் சமூக இடைவெளி 50 வீதத்தை விட குறைந்து வருகின்றமை மிகவும் அச்சுறுத்தலாக உள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசாங்கம் தெரிவித்துள்ளது

எனவே சமூக இடைவெளி 80 வீதத்திற்கும் அதிகமாக இருக்கும் வகையில் நடவடிக்கைகளை நாடு பூராவும் நடைமுறைப்படுத்துவது அவசியம் என்றும் மேற்படி சங்கம் அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளது.

அத்துடன் உலக அளவில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்படும் வரை நாட்டிற்குள் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களை திறக்கக் கூடாது எனவும் நாட்டில் தற்போது முன்னெடுத்து வரும் செயற்பாடுகளால் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்த அளவில் காணப்படும் நிலையில் அதனை எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடுப்பகுதி வரை தக்க வைத்துக் கொள்வது அவசியம் என்றும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் சமூக இடைவெளி மட்டம் மூன்று நிலைகளில் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ள கிராமங்கள் மற்றும் நகரங்களில் சமூக இடைவெளி 90 வீதமாக இருப்பதும் தீவிர கண்காணிப்பு வலயங்களாக ஊரடங்குச் சட்டத்தை தொடர்ந்தும் அமுல்படுத்தி வரும் பிரதேசங்களில் சமூக இடைவெளி 70 வீதத்திற்கும் அதிகமாக உள்ளமை மகிழ்ச்சி தரும் விடயமாக உள்ளது என்றும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது

பொருளாதார மத்திய நிலையங்கள், மீன்பிடித் துறைமுகங்கள், மெனிங் வர்த்தக சந்தை உள்ளிட்ட முக்கிய வர்த்தக நிலையங்கள்,தேயிலை தொழிற்சாலை உள்ளிட்ட மிக மோசமான பாதிப்பு இடங்கள் தொடர்பில் மிகுந்த கவனம் செலுத்துவது முக்கியம் என்றும் அந்த சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

அதேவேளை எதிர்வரும் காலங்களில் நோய் பரவல் அதிகரிக்குமானால் அதற்கு வெற்றிகரமாக முகங்கொடுக்கும் வகையில் வைத்தியசாலைகளில் பௌதீக மற்றும் மனித வளங்களை அதிகரித்துக்கொள்ளவும் அதற்காக தீவிர சிகிச்சை பிரிவில் கட்டில்களின் எண்ணிக்கையை அதிகரித்துக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அந்த சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது

நோயாளிகள் உண்மையை மறைத்ததால் நாட்டில் பல்வேறு வைத்தியசாலைகளில் குறிப்பாக நீர்கொழும்பு, ஸ்ரீ ஜயவர்தனபுர,களுபோவில, ராகம மற்றும் டி சொய்சா ஆஸ்பத்திரி ஆகியவற்றில் மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதார சேவை உத்தியோகத்தர்கள் பெருமளவில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நேரிட்டுள்ளதாகவும் அதனால் மருத்துவர்கள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என்று சங்கம் அரசாங்கத்திற்கு அறிவுறுத்தியுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top