(UTV | கொழும்பு) – பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவை இன்று கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடினார். பிரதமர் இம்ரான் கான், பாகிஸ்தான்-இலங்கை உறவானது நம்பிக்கை மற்றும் பரஸ்பரபுரிந்துணர்வினால் கட்டியெழுப்பப்பட்டுள்ளதை சுட்டுக்காட்டினார்.
இருதரப்பு வர்த்தகம், முதலீடுகள் மற்றும் வணிக ஒத்துழைப்பு ஆகியவைகளில் இருநாடுகளும் ஒன்றிணைந்து செயற்படுவதன் முக்கியத்துவத்தை இம்ரான் கான் வலியுறுத்தினார்.
விவசாயம், சுற்றுலா, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், விளையாட்டு, கல்வி மற்றும் கலாச்சாரம் போன்ற பல்வேறு துறைகளின் முக்கியத்துவத்தையும் இம்ரான் கான் வலியுறுத்தினார். வறுமை ஒழிப்பில் இரு நாடுகளும் ஒன்றாக செயற்படுவதன் முக்கியத்துவமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.
பாகிஸ்தானும் இலங்கையும் எப்போதும் ஒன்றாக செயற்படும் என்றும், எதிர்காலத்திலும் இலங்கைக்கு பாகிஸ்தான் ஆதரவு வழங்க தயங்கமாட்டாது என்றும் பிரதமர் இம்ரான் கான் குறிப்பிட்டார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய பாரம்பரிய மற்றும் கலாச்சார உறவுகளைக் குறிப்பிடுகையில், இலங்கை மக்களுக்கு பெளத்த மத சுற்றுலாவுக்கு முக்கிய இடமாக பாகிஸ்தான் உள்ளதாக குறிப்பிட்ட அவர், பாகிஸ்தானின் வளமான புத்த பாரம்பரியத்தை பற்றியும் தெளிவு படுத்தினார்.
பிராந்திய சூழலில், அமைதி, அபிவிருத்தி மற்றும் நாடுகளுக்கு இடையே உள்ள தொடர்புகள் பற்றிய தனது பார்வையும் தெளிவுபடுத்தினார். சார்க் அமைப்பின் மூலம் பிராந்திய ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தையும், பி.ஆர்.ஐ (BRI) யின் முதன்மை திட்டமான சி.பி.இ.சி (CPEC) மூலம் பிராந்திய அபிவிருத்திக்கான வாய்ப்புக்களையும் வலியுறுத்தினார்.
மேலும் , ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவுக்கு பாகிஸ்தானுக்கு விஜயமொன்றை மேற்கொள்ளுமாறும் பிரதமர் இம்ரான் கான் அழைப்பை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.