உள்நாடு

ஞானசார தேரரின், ‘அப சரண’ என்ற வசனத்தினால் தான் நான்கு முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர் [VIDEO]

(UTV | கொழும்பு) – ஈஸ்டர் தாக்குதலில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவருக்கும் தகுந்த தண்டனைகள் வழங்குமாறும், சந்தேகத்தின் பெயரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான அப்பாவிகளை உடனடியாக விடுதலை செய்யுமாறும் மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்தார்.

பாராளுமன்றில் இன்று(07) இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,

 

“ஒரு இனத்தை குறியாக வைத்து, அதை மையப்படுத்தி, உங்களின் கவனத்தை செலுத்தி, அந்த இனத்தை மட்டும் அடக்க நினைக்காதீர்கள். நாட்டின் மீது பாசம் கொள்ளுங்கள். இந்த நாடு சுதந்திரமடைந்து 70 வருடங்களுக்கு மேலாகின்றது. அதில் முப்பது வருடங்கள் தமிழ் மக்களுடனான போராட்டமும், அதன் பிறகு அண்மைய பத்து வருடங்களுக்கு மேலாக முஸ்லிம்கள் உடனான போராட்டமும் தொடர்கிறது.

கண்டி – திகன, தம்புள்ள, காலி, அளுத்கமை ஆகிய இடங்களில் முஸ்லிம்கள் மீது குண்டர்களால் கட்டவிழ்த்துவிடப்பட்ட அராஜகங்கள் தாங்க முடியாதவை. ஞானசார தேரரின், ‘அப சரண’ என்ற வசனம், அதாவது அழிவை நோக்கிய, கொலை செய்ய தூண்டக் கூடிய அந்த வசனத்தினால்தான், அளுத்கமையில் நான்கு முஸ்லிம்கள் கொல்லப்பட்டதுடன், முஸ்லிம்களின் பல்லாயிரக்கணக்கான சொத்துக்களும் அழிக்கப்பட்டன.

முஸ்லிம் சமூகம் எந்தச் சந்தர்ப்பத்திலும் சஹ்ரானின் கொடூரச் செயலை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், உயிர்த்த ஞாயிறு தாக்குதலை “ஏன் மேற்கொண்டோம்?” என சஹ்ரான் வீடியோவின் மூலம் கூறி, “ஞானசார தேரரின் பேச்சும், செயற்பாடுகளும், அதேபோன்று, பேரினவாதிகளின் முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான செயற்பாடுகளுமே இதற்குக் காரணம். அதனால்தான் இவ்வாறு நடைபெறுகின்றது” எனத் தெரிவித்துள்ளான். எனவே, இவைகளை இனியாவது கவனத்தில்கொண்டு இந்த நாட்டை மீண்டும் அழிவிலிருந்து பாதுகாக்க வேண்டும்.

இஸ்லாத்துக்கு எதிராக செயற்படும் ஒருசில மதகுருமார்கள் வேண்டுமென்றே இனவாதத்தை தோற்றுவித்து, இனவாதிகளின் ஏஜெண்டுகளாகவும் செயற்பட்டு வருவதை இந்த உயரிய சபையில் சுட்டிக்காட்டுகின்றேன்.

ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவராக முன்னர் இருந்த ஹஜ்ஜுல் அக்பர், கைது செய்யப்பட்டு தற்போது தடுத்துவைக்கப்பட்டுள்ளார். ஜமாஅத்தே இஸ்லாமி ஆத்மீக மற்றும் சமூகப் பணிகளை செய்து வரும் பாரிய இயக்கமாகும். அந்த அமைப்பிலிருந்து விலக்கப்பட்டவர்களே சஹ்ரானுடன் தொடர்பு வைத்திருந்தார்கள். ஆனால், தற்போது இந்த இயக்கத்தில் இருப்பவர்கள் எவருமே இந்த தாக்குதலில் சம்பந்தப்படவில்லை. ஹஜ்ஜுல் அக்பர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கான பதிலை ஜமாஅத்தே இஸ்லாமி அமைப்பை சார்ந்தவர்கள் தந்திருக்கின்றார்கள். அவர்களின் விளக்கத்தை இந்த பாராளுமன்றில் சமர்ப்பிக்கின்றேன்” என்று தெரிவித்தார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top