ஒட்சிசனுக்காக சிங்கப்பூரை நாடுகிறது அரசு

(UTV | கொழும்பு) –  வைத்தியசாலைகளில் ஒட்சிசன் சிலிண்டருக்கான பற்றாக்குறை இல்லை​யெனவும், தற்போதைய தேவைக்கு போதுமானளவு ஒட்சிசன் சிலிண்டர்கள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தேவை​யேற்படின் சிங்கப்பூரிலிருந்து ஒட்சிசன் சிலிண்டர்களை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் மின்சாரத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்திருந்தார்.

வைத்தியசாலைகளில் ஒட்சிசன் சிலிண்டர்கள் பற்றாக்குறை காணப்படுவதாக சமூக வலைத்தளங்களில் போலியான செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன எனத் தெரிவித்த அவர், தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து மீள்வதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது என்றார்.

மாத்தறை பிரதேசத்தில் நேற்று (02) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.

நாட்டில் இரண்டு பிரதான நிறுவனங்கள் மருத்துவத் துறைக்குத் தேவையான ஒட்சிசன் சிலிண்டர்களை உற்பத்தி செய்கின்றன. தற்போதைய நிலையை கருத்திற்கொண்டு ஜனாதிபதி இவ்விரண்டு நிறுவனங்களிடமும் உற்பத்தி தொடர்பில் மதிப்பீட்டு அறிக்கையை கோரினார்.

மருத்துவ துறைக்கு ஒரு நாளைக்கு தேவையான 22,000 லீற்றர் ஒட்சிசன் சிலிண்டர்களை இவ்விரு நிறுவனங்களும் உற்பத்தி செய்கின்றன. தற்போது அந்த உற்பத்தி 67,000 லீற்றராக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள அவர், நாடு தழுவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் 15,000 லீற்றர் ஒட்சிசன் சிலிண்டர்கள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன.
ஆகவே, மருத்துவ துறையில் ஒட்சிசன் சிலிண்டர் பற்றாக்குறை ஏற்படவில்லை என்றார். எனவே, தற்போதைய நெருக்கடியான சூழ்நிலை குறித்து அரசாங்கம் அதிக கவனம் செலுத்தியுள்ளதென்றும் ஒட்சிசனுக்கான தேவை அதிகரிக்குமாயின், சிங்கப்பூர் நாட்டில் இருந்து ஒட்சிசன் சிலிண்டர்களை தேவையான அளவு மேலதிகமான இறக்குமதி செய்யுமாறு ஜனாதிபதி உரிய தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார் எனவும் தெரிவித்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *