விளையாட்டு

கொரோனாவின் தலையீட்டில் IPL இடைநிறுத்தம்

(UTV |  இந்தியா) – கொரோனா பரவல் காரணமாக 2021 ஆம் ஆண்டுக்காக ஐபிஎல் போட்டி தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா சூழல் காரணமாக கடந்த வருட ஐபிஎல் போட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது.

இந்த வருடப் போட்டி இந்தியாவிலேயே நடத்தப்படுகிறது. சென்னை, மும்பை, கொல்கத்தா, ஆமதாபாத், தில்லி, பெங்களூர் ஆகிய ஆறு நகரங்களில் ஐபிஎல் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

சென்னை, மும்பையில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று நிறைவடைந்த நிலையில் தற்போது அஹமதாபாத், டில்லியில் போட்டிகள் நடைபெற்று வந்தன.

கொல்கத்தா நைட் ரைடா்ஸ் அணி வீரா்களான வருண் சக்கரவா்த்தி, சந்தீப் வாரியர் மற்றும் சிஎஸ்கே பந்துவீச்சுப் பயிற்சியாளர் எல். பாலாஜி, பேருந்துப் பராமரிப்பாளர் ஆகியோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதனால் இரு அணி வீரர்களும் விடுதி அறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

இதையடுத்து கொல்கத்தா – பெங்களூா் அணிகள் நேற்றிரவு மோத இருந்த போட்டியும் நாளை நடைபெறுவதாக இருந்த சிஎஸ்கே – ராஜஸ்தான் போட்டியும் திகதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

கொரோனா பாதிப்பு சன்ரைசர்ஸ் அணியையும் விட்டுவைக்கவில்லை. அந்த அணியின் விக்கெட் கீப்பர் சஹா, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து சன்ரைசர்ஸ் அணி வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். இன்று நடைபெறுவதாக இருந்த மும்பை – சன்ரைசர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஒத்திவைக்கப்பட இருந்தது. டில்லி வீரர் ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.

கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருவதால் ஐபிஎல் போட்டியைத் தொடர்ந்து நடத்துவது குறித்த கேள்விகளும் எழுந்தன.

இதையடுத்து கொரோனா பரவல் காரணமாக ஐபிஎல் 2021 போட்டி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐயின் துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தகவல் அளித்துள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top