ஆப்கான் மக்களை புறக்கணிக்க வேண்டாம்

(UTV |  ஜெனீவா) – ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறும் அகதிகளை ஏற்றுக் கொள்ளுமாறு உலக நாடுகளுக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ குத்ரேஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் நிலவரம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் கூட்டம் இன்று நடந்தது. இந்தக் கூட்டத்துக்கு தலைமை வகுத்த ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ குத்ரேஸ் கூறியதாவது:

“.. தலிபான்கள் ஆப்கன் மக்களின் உயிர்களை மதித்து கட்டுப்பாடுடன் நடந்து கொள்ள வேண்டும். மக்களைப் பாதுகாத்து, மனிதாபிமான அடிப்படையில் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

ஆப்கனிலிருந்து ஆயிரக்கணக்கானோர் வெளியேறும் சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் அனைத்து நாடுகளும் ஆப்கனுக்கு மனிதாபிமான அடிப்படையில் அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும். ஆப்கனிலிருந்து வரும் அகதிகளை ஏற்றுக் கொள்ளுமாறு அனைத்து நாடுகளையும் கேட்டுக் கொள்கிறேன்.

ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான தகவல்கள் கவலை அளிக்கின்றன குறிப்பாக ஆப்கன் பெண்கள், சிறுமிகளின் நிலைமை வருத்தமளிக்கிறது. அங்குள்ள பெண்கள் இருண்ட காலம் திரும்பிவிட்டதாக அச்சத்தில் உள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் மனிதை உரிமைகள் பாதுகாக்கப்பட நாம் ஒரே குரலில் ஒன்றிணைந்து பேச வேண்டும். தலிபான்கள், சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும் என வேண்டுகிறேன்.

ஆப்கானிஸ்தானில் தீவிரவாத அச்சுறுத்தல் மேலோங்கியுள்ள சூழலில் உலக நாடுகள் ஒன்றிணைந்து சர்வதேச பயங்கரவாதத்தை கட்டுக்குள் வைக்க அனைத்து வழிமுறைகளையும் பயன்படுத்த வேண்டும். ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளின் பாதுகாப்பான கூடாரமாக மாறிவிட ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. அதற்கு உலக நாடுகளின் ஒற்றுமை அவசியம்.

ஆப்கன் மக்களை நாம் கைவிட்டுவிடக் கூடாது. புறக்கணிக்கவும் கூடாது. அடுத்த வரும் சில நாட்கள் மிக முக்கியமானது.. ‘ இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *