(UTV | நியூயார்க்) – உக்ரைனில் கடுமையாக போர் நடந்துவருவதால் அங்கிருந்து மக்கள் வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகிறார்கள்.
போலந்து, ஹங்கேரி, ருமேனியா, சுலோவாக்கியா ஆகிய நாடுகளின் எல்லைகளில் லட்சக்கணக்கானோர் குவிந்து இருக்கிறார்கள்.
இந்த நிலையில் உக்ரைனில் கடந்த 24ம் திகதி போர் தொடங்கியதில் இருந்து 7 நாட்களில் 10 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறி உள்ளதாக ஐ.நா. அகதிகள் முகமை தெரிவித்துள்ளது.
இது குறித்து அகதிகளுக்கான ஐ.நா.சபை உயர் அதிகாரி பிலிப்போ கிராண்டி டுவிட்டரில் கூறும் போது, ‘உக்ரைனில் இருந்து 7 நாட்களில் 10 லட்சம் பேர் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்’ என்று தெரிவித்துள்ளார்.
அதிகபட்சமாக 4½ லட்சம் பேர் போலந்து நாட்டில் தஞ்சம் அடைந்துள்ளனர். ஹங்கேரியில் 1.14 லட்சம் பேரும், மால்டோவாவில் 79 ஆயிரம் பேரும், ஐரோப்பிய நாடுகளுக்கு 69 ஆயிரம் பேரும், சுலோவாக்கியாவுக்கு 67 ஆயிரம் பேரும் சென்றுள்ளனர்.
போர் நடந்து வருவதால் மேலும் 40 லட்சம் பேர் உக்ரைனை விட்டு வெளியேறக்கூடும் என்று கணிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் அந்த கணிப்பு அதிகரிக்கலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.
இதனால் இது இந்த நூற்றாண்டில் மிகப்பெரிய அகதிகள் வெளியேற்றமாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.