உலகம்

“நேட்டோ நாடுகள் அமைப்பில் உக்ரைன் சேர விரும்பவில்லை” – ஜெலன்ஸ்கி திடீர் அறிவிப்பு

(UTV |  உக்ரைன்) – உக்ரைன் நாட்டை நேட்டோ நாடுகள் அமைப்பில் சேர்த்து கொள்ள வேண்டும் என அந்நாட்டின் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி விருப்பம் தெரிவித்திருந்த நிலையில் அதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்தது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க இதுவும் ஒரு காரணம் எனக் கூறப்பட்டது. போர் தொடங்கிய பின்னர் நேட்டோ நாடுகள் உக்ரைனுக்கு பெரிய அளவில் உதவிகள் எதுவும் செய்யவில்லை.

இதனை உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி வெளிப்படையாக தெரிவித்தார். போர் தொடங்கி 2 வாரங்கள் ஆனநிலையில் அவர் இதுகுறித்து கூறியதாவது;

“..நேட்டோ நாடுகள் அமைப்பில் சேரவேண்டும் என்று உக்ரைன் விரும்பியது. ஆனால் நேட்டோ, உக்ரைனை ஏற்க விரும்பவில்லை என்பதை இப்போதுதான் புரிந்து கொண்டோம்.

எனவே நேட்டோ அமைப்பில் எங்களை உறுப்பினராக சேர்த்து கொள்ளுங்கள் என்ற எங்களின் கோரிக்கைக்கு இனியும் அழுத்தம் கொடுக்க போவதில்லை. இனி நேட்டோ நாடுகள் அமைப்பில் சேரவிரும்பவில்லை.

மண்டியிட்டு எதையாவது தானமாக பெறும் நாட்டின் ஜனாதிபதியாக இருக்க நான் விரும்பவில்லை. ரஷ்யா ஜனாதிபதி புதின், உக்ரைனில் உள்ள 2 பிரிவினைவாத குழுக்களுக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்கி உள்ளார்.

அந்த குழுக்கள் தொடர்ந்து எங்களுடன் போரிட்டு வருகிறார்கள். அங்கு வசிக்கும் மக்கள் உக்ரைனின் பகுதியாக வாழவே ஆசைப்படுகிறார்கள்.

ரஷ்யாவை தவிர வேறுயாரும் இக்குழுக்களை அங்கீகரிக்கவில்லை. அப்பகுதி மக்களுக்கு பாதுகாப்பு குறித்த உத்தரவாதம் வேண்டும். இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் தயாராக உள்ளது.

ரஷ்ய ஜனாதிபதி புதின் இப்பிரச்சினைகள் குறித்து திறந்த மனதுடன் பேச்சு வார்த்தைக்கு வரவேண்டும்.

ஆக்சிஜன் இல்லாமல் சுவாசிக்க முயற்சிப்பதற்கு பதில் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண முன்வரவேண்டும். அதற்கான கலந்துரை யாடலை அவர் தொடங்க வேண்டும்..” எனத் தெரிவித்துள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top