ரஷ்யா கைப்பற்றிய நகரை உக்ரைன் இராணுவம் மீட்டது

ரஷ்யா கைப்பற்றிய நகரை உக்ரைன் இராணுவம் மீட்டது

(UTV |  கீவ்) – உக்ரைன் மீது சிறப்பு ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷியா தொடங்கிய போர் இன்று 32-வது நாளாக நீடிக்கிறது.

ரஷிய படைகளுக்கு எதிராக உக்ரைன் ராணுவத்தினர் கடுமையாக போரிட்டு வருகிறார்கள். ரஷிய படைகள் தாக்குதல் தொடங்கிய சில நாட்களில் உக்ரைனின் சிறிய நகரங்களை கைப்பற்றியது. அதேபோல் தலைநகர் கீவ், புறநகர் பகுதிகளையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தன.

ரஷியா கைப்பற்றிய பகுதிகளை மீட்க உக்ரைன் ராணுவ வீரர் தீவிரமாக உள்ளனர். இதில் கீவ் புறநகர் பகுதிகளில் சிலவற்றை உக்ரைன் மீட்டது. அங்கிருந்த ரஷிய படைகள் பின்வாங்கி சென்றன.

இந்தநிலையில் ரஷிய படையிடம் இருந்து ஒரு நகரை உக்ரைன் ராணுவம் மீட்டுள்ளது. உக்ரைனின் வடகிழக்கு நகரமான டிரோஸ்டியானெட்சை ரஷியா தனது படையெடுப்பின் போது முதல் நகராக கைப்பற்றி இருந்தது. அங்கு ரஷிய படைகளை எதிர்த்து உக்ரைன் ராணுவ வீரர்கள் சண்டையிட்டு வந்தனர்.

இந்தநிலையில் டிரோஸ்டி யானெட்ஸ் நகரை ரஷிய படையிடம் இருந்து மீட்டுள்ளதாக உக்ரைன் ராணுவம் அறிவித்தது. இந்த நகரம் ரஷிய எல்லைக்கு அருகே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உக்ரைனின் மேற்கு நகரமான லிவிவ் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 5 பேர் காயம் அடைந்தனர். இது குறித்து பிராந்திய கவர்னர் மக்சிம் கோசிட்ஸ்கி கூறும் போது, ‘‘லிவிவின் புறநகரில் சக்திவாய்ந்த குண்டு வெடிப்புகள் நிகழ்த்தப்பட்டன. இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடையுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்’’ என்றார்.

லிவிவ் நகர், போலந்து நாட்டு எல்லையில் இருந்து 60 கி.மீட்டர் தொலைவில் உள்ளது. போலந்துக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வந்துள்ள நிலையில் அந்நாட்டு எல்லை அருகே ரஷியா தாக்குதல் நடத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தாக்குதல் ஜோபைடனுக்கு ரஷியா எச்சரிக்கை விடுக்கும் வகையில் அமைந்துள்ளதாக கருதப்படுகிறது.

கடுமையான சேதத்தை சந்தித்துள்ள துறைமுக நகரமான மரியுபோலில் 90 சதவீத கட்டிடங்கள் இடிந்துள்ளன. அந்த நகரில் இருந்து 1.40 லட்சம் பேர் தப்பி சென்றதாகவும் இன்னும் 1.70 லட்சம் மக்கள் சிக்கி இருப்பதாக மரியுபோல் நகர கவுன்சில் தெரிவித்துள்ளது.

உக்ரைனில் கைவிடப்பட்ட செர்னோபில் அணு உலை நிலையத்தை ரஷிய படைகள் ஏற்கனவே கைப்பற்றின. இந்தநிலையில் அணு உலை ஊழியர்கள் தங்கி இருக்கும் நகரத்தை ரஷிய ராணுவம் கைப்பற்றி உள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

செர்னோபில் அணு உலை நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்கள் வசிக்கும் ஸ்லா‌ஷட்பூச் நகரையும், நகராட்சி ஆஸ்பத்திரியையும் ரஷிய படைகள் ஆக்கிரமித்துள்ளதாக பிராந்திய ராணுவ நிர்வாகம் தெரிவித்து இருக்கிறது.

தலைநகர் கீவ்வில் இருந்து வடக்கே 160 கி.மீட்டர் தொலைவில் இருக்கும் அந்நகரில் 25 ஆயிரம் பேர் வசித்து வருகிறார்கள்.

செர்னோபில் அணு உலை நிலையத்தை ரஷியா போர் தொடங்கிய பிப்ரவரி 24-ந்தேதி அன்றே கைப்பற்றியது. அந்த அணு உலையில் ரஷியா நாச வேலையில் ஈடுபடலாம் என்று உக்ரைன் எச்சரிக்கை விடுத்து வருகிறது.

COMMENTS

Wordpress (0)
Disqus ( )