உலகம்

ரஷ்ய அதிபர் புதினின் இரண்டு மகள்களுக்கு அமெரிக்கா தடை

(UTV |  வொஷிங்டன்) – உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்கா பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. இந்த நிலையில், ரஷ்ய அதிபர் புதினின் மகள்களுக்கு எதிராகவும் அமெரிக்கா தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

புதினின் மகள்களான 36 வயதான மரியா வொரோன்ட்ஸோவா (Maria Vorontsova) மற்றும் 35 வயதான கேத்தரினா டிக்கோனோவா (Katerina Tikhonova)ஆகியோர் அமெரிக்க நிதி அமைப்பில் பரிமாற்ற நடவடிக்கை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு அமெரிக்காவில் சொத்துக்கள் இருந்தால் அவைகள் முடக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தன் குடும்பத்தினர் குறித்து பொதுவெளியில் அடையாளப்படுத்தாமல் எப்போதும் பாதுகாத்தே வந்துள்ளார். தன்னுடைய மகள்களின் பெயர்களைக் கூட அவர் பொதுவெளியில் தெரிவிப்பதில்லை.

ஆனால், புதினுடைய இரண்டு மகள்களின் பெயர்களும், ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்கா வெளியிட்ட தடைகளில் இடம்பெற்றுள்ளன. அவர்கள் இருவரும் புதின் மற்றும் அவருடைய முன்னாள் மனைவி லியூட்மிலாவின் மகள்கள் ஆவர்.

அவருடைய மூத்த மகள் மரியா 1985 ஆம் ஆண்டு பிறந்தார். செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் பல்கலைக்கழகத்தில் உயிரியல் படிப்பும், மாஸ்கோ பல்கலைக்கழகத்தில் மருத்துவமும் பயின்றுள்ளார்.

அவருடைய தங்கை கேத்தரீனா டிகோனோவா பொதுவெளியில் நன்கு அறியப்பட்டவராக உள்ளார். அவர் ‘Rock & Roll’ நடனக்கலைஞர். 2013 ஆம் ஆண்டில் நடைபெற்ற சர்வதேச நிகழ்ச்சி ஒன்றில் கேத்தரீனாவும் அவருடைய இணையும் 5 ஆவது இடத்தைப் பிடித்தனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top