உள்நாடு

பிரதமர் பதவியை ஏற்கத் தயார்

(UTV | கொழும்பு) – நாளைய தினம் புதிய அரசாங்கம் பதவிப் பிரமாணம் செய்து கொள்வதற்கு தேவையான ஏற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு தயார் என சஜித் பிரேமதாச ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

இதன்படி, பல உடன்படிக்கைகளுக்கு உட்பட்டு, எதிர்க்கட்சியில் உள்ள பிரதான கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையில் ஏனைய கட்சிகளுடன் இணைந்து குறுகிய கால அரசாங்கத்தை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டமைப்பின் தலைவர் பதவியை தாம் பொறுப்பேற்க தீர்மானித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.

கடிதம் ஆரம்பம்;

அதிமேதகு ஜனாதிபதி கோட்டபய ராஜ்பக்ஷ,
ஜனாதிபதி அலுவலகம்,
கொழும்பு.

ஜனாதிபதி அவர்களே,

கடந்த சில தினங்களுக்கு முன்பு நீங்கள் தொலைப்பேசி ஊடாக என்னை தொடர்பு கொண்டு பிரதமர் பதவியை பொறுப்பேற்றுக்கொள்ளுமாறு என்னிடம் முன்வைத்த யோசனை மற்றும் வணக்கத்திற்குரிய மகாநாயக்க தேரர்களும்,ஏனைய மதத்தலைவர்களும் கேட்டுக்கொண்டதற்கு இணங்க பல்வேறு சந்தர்ப்பங்களிலும் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி ஆகியவற்றின் உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தேன்.

அதன்படி கீழே குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளின் கீழ் எதிரணியின் பிரதான கட்சி என்ற அடிப்படையில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைத்துவத்தின் கீழ் ஏனைய அனைத்து கட்சிகளுடனும் இணைந்து குறுங்கால அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கு ஐக்கிய மக்கள் கூட்டணியின் தலைவர் என்ற ரீதியில் பிரதமர் பதவியை பொறுப்பேற்றுக்கொள்வதற்கு தீர்மானித்திருப்பதாக அறிய தருகிறேன்.

நேற்று நீங்கள் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் குறிப்பிடப்பட்டவாறு,

1- குறுகிய காலப்பகுதிக்குள் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதற்கு இணக்கம் தெரிவித்தல்.

2- இரண்டு வார காலத்திற்குள் சகல கட்சிகளின் ஒத்துழைப்புடன் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை கொண்டு வருதல் மற்றும்
நடைமுறைப்படுத்தல்.

3 -எம்மால் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வெளியிடப்பட்டுள்ள அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் ஊடாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இரத்து செய்யும் வகையில் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விடயதானங்களுக்கமைய மிகக்குறுகிய காலத்திற்குள் சகல கட்சிகளினதும்,இணக்கப்பாட்டுடன் நடைமுறைப்படுத்தல்.

4 – மக்களுடைய வாழ்க்கை முறையை வழமை நிலைக்கு கொண்டு வருவதுடன்,சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்து மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்ட அரசியலமைப்பு திருத்தங்களை நடைமுறைப்படுத்திய பின்னர் ஸ்தீரமான அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கு மக்களுக்கு வாய்ப்பளிக்கக்கூடிய வகையில் பாராளுமன்ற தேர்தலை நடாத்துதல்.

மேலே குறிப்பிடப்பட்ட அரசியலமைப்பின் திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கும்,
எதிர்வரும் காலங்களில் மேலும் நெருக்கடிக்குள்ளாகக் கூடிய பொருளாதார நிலைவரத்தை கட்டுப்படுத்துவதற்கும்,
என்னிடமும்,எனது குழுவினிடமும் உறுதியானதும்,தெளிவானதுமான செயற்திட்டமொன்று உள்ளது என்பதை கூற விரும்புகிறேன்.

மேலே குறிப்பிடப்பட்ட விடயங்களுக்கமைவாக இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்கும் கட்டமைப்பு தொடர்பிலும் புதிய அரசாங்கத்தின் பதவியேற்பிற்கு அவசியமான நடவடிக்கைகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடாத்த தயார் என்பதையும் அறியத்தருகிறேன்.

நன்றி.

இவ்வண்ணம்,

சஜித் பிரேமதாஸ,
எதிர்க்கட்சி தலைவர் மற்றும்
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்.

கடிதம் நிறைவுக்கு 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top