கோட்டாபயவுக்கு மாலைதீவு மக்களால் எதிர்ப்பு

(UTV | கொழும்பு) – மாலத்தீவில் தஞ்சம் அடைந்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அடைக்கலம் தரக்கூடாது, அவரை மாலைதீவை விட்டு வெளியேற்றுமாறு அந்நாட்டு மக்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, மக்கள் புரட்சி காரணமாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது மாளிகையில் இருந்து வெளியேறி கடந்த சில நாட்களாக இலங்கை ராணுவத்தின் பாதுகாப்பில் இருந்து வந்த நிலையில், இன்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக கடிதத்தினை கையளித்து விட்டு, அதிகாலை விமானப்படை விமானத்தில் மாலத்தீவில் தஞ்சம் அடைந்துள்ளார்.

இலங்கை வரலாற்றில் அதிகூடிய வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்று நாட்டின் 7வது ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச இருந்து வந்தார். அதுபோல,கோத்தபய ராஜபக்ச தனது பதவிக்காலம் முடிவதற்குள் பதவியில் இருந்து விலகும் முதலாவது ஜனாதிபதியாகவும் வரலாற்றில் இடம் பிடித்துள்ளார். இவரது குடும்பத்தினரின் ஊழல் காரணமாக, இலங்கை இன்று திவாலாகி உள்ளது. இதனால் ஆவேஷமடைந்த மக்கள், ராஜபக்ஷ குடும்பத்தினர் பதவி விலக வலியுறுத்தி கடந்த சில மாதங்களாக போராடி வருகின்றனர். இந்த போராட்டம் தீவிரம் அடைந்து, கடந்த 9ம் திகதி போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையினை கைப்பற்றி இருந்தனர்.

இந்நிலையில், கோட்டாபயவுக்கான அமெரிக்கா வீசா இரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மாலத்தீவில் அவர் தஞ்சமடைந்துள்ளார். இதனால் அந்நாட்டு மக்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது.

அதிகாலை கோட்டாபய ராஜபக்ஷ விமான நிலையத்தில் இருந்து இறங்கி சென்ற்போது, அங்குள்ள மக்கள் கோட்டாபயவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் பலத்த பாதுகாப்புடன் அவர் அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

கோட்டாபயவுக்கு எதிராக இலங்கை மக்கள் முன்னெடுத்துள்ள புரட்சிக்கு மாலைதீவு மக்களும் ஆதரவு தெரிவிக்கின்றனர். இந்நிலையில் கோட்டாபயவை உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு எச்சரிக்குமாறு மாலைதீவு சுற்றுலா அமைச்சகத்தின் நிர்வாக இயக்குனர் தைய்யிப் கோரியுள்ளார். மாலைதீவில் கோட்டாபயவுக்கு புகலிடம் அல்லது அகதி அந்தஸ்து வழங்கக்கூடாது என அவர் அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *