நிமல் சிறிபால டி சில்வா இன்று அமைச்சுப் பதவிப் பிரமாணம்

நிமல் சிறிபால டி சில்வா இன்று அமைச்சுப் பதவிப் பிரமாணம்

(UTV | கொழும்பு) –   துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சராக முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இன்று (02) மீண்டும் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் ஜப்பானில் உள்ள தாய்ஸ் நிறுவனத்திடம் லஞ்சம் வாங்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரி நிமல் சிறிபால டி சில்வா தனது அமைச்சுப் பதவியை ஜூலை 6ஆம் திகதி இராஜினாமா செய்தார்.

இது தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்த கோரிக்கைக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

முன்னாள் ஜனாதிபதி இராஜினாமா செய்ததையடுத்து, விசாரணைகள் பாதியில் நிறுத்தப்பட்டதுடன், இந்த விசாரணைகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் முன்னாள் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன்படி, இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழுவின் அறிக்கை ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிடம் நேற்று (31) கையளிக்கப்பட்டது.

குழுவின் அறிக்கையின் பிரகாரம் முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இது தொடர்பான குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, நேற்று (31ஆம் திகதி) நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்ட அவர், இன்று (02ஆம் திகதி) மீண்டும் அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்யவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

COMMENTS

Wordpress (0)
Disqus ( )