உள்நாடு

அடுத்த இரு வாரங்களில் முட்டைக்கு கட்டுப்பாட்டு விலை

(UTV | கொழும்பு) –  அடுத்த இரண்டு வாரங்களில் முட்டைக்கான கட்டுப்பாட்டு விலையில் திருத்தம் செய்யப்படும் என வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

பல்பொருள் அங்காடிகளில் விற்கப்படும் பொதி செய்யப்பட்ட முட்டைகளுக்கான தற்போதைய கட்டுப்பாட்டு விலை நியாயமற்றது என்பதால், பொதியிடல் செலவு உட்பட புதிய கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதன்படி, பொதி செய்யப்பட்ட வெள்ளை மற்றும் சிவப்பு நிற முட்டைகளுக்கு தனித்தனியாக கட்டுப்பாட்டு விலைகள் நிர்ணயிக்கப்பட உள்ளன.

பொதியிடல் தொடர்பான தீர்மானங்கள் தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகாரசபையின் ஊடாகத் தேவையான பரிசீலனைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், வெள்ளை மற்றும் சிவப்பு நிற முட்டைகளுக்கு தனித்தனியாக 50 ரூபாவாக விலையை உயர்த்த வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ இணங்கியுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் அண்மையில் அமைச்சருடன் நடத்திய கலந்துரையாடலின் பின்னர் தெரிவித்திருந்தது.

எனினும், நுகர்வோர் அதிகாரசபை அண்மையில் வெள்ளை முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 43 ரூபாவாகவும் சிவப்பு நிற முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை 45 ரூபாவாகவும் நிர்ணயித்திருந்த நிலையில், அதில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படமாட்டாது என அரசாங்கம் அறிவித்தது.

இதற்கு முட்டை உற்பத்தியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது சந்தையில் முட்டைக்கான தட்டுப்பாடு நிலவுகின்றது.

எவ்வாறாயினும், இன்று முதல் முட்டைகளை தட்டுப்பாடு இன்றி சந்தைக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top