ரணிலுக்கு பிரித்தானிய பிரதமர் பாராட்டு

(UTV | கொழும்பு) – இலங்கை எதிர்கொள்ளும் நெருக்கடிக்கு தீர்வு காண அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய அரசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முயற்சிகளை பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் பாராட்டியுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை அரச தலைவராக நியமித்தமைக்கு வாழ்த்துச் செய்தியில் பிரித்தானியப் பிரதமர், ஜனநாயகக் கோட்பாடுகளைப் பாதுகாப்பதும் ஜனநாயக இணக்கப்பாட்டின் எதிர்பார்ப்புமே ஜனாதிபதியின் வெற்றி என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கான பிரித்தானிய அரசாங்கத்தின் உண்மையான அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்திய பிரதமர் பொரிஸ் ஜோன்சன், குறிப்பாக தற்போதைய பொருளாதார மற்றும் சமூக சவால்களில் இலங்கை மக்களுடன் ஐக்கிய இராச்சியம் தொடர்ந்தும் இணைந்து பணியாற்றும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தை கையாள்வதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விரைவான மற்றும் சாதகமான முன்னேற்றத்தை அடைய முடியும் என நம்பிக்கை தெரிவித்த பிரித்தானிய பிரதமர், இலங்கைக்கு ஆதரவாக சர்வதேச பங்காளிகளுடன் இணைந்து கொள்ள ஐக்கிய இராச்சியம் தயாராக இருப்பதாகவும் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் நீண்ட கால மற்றும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை இப்போது ஏற்படுத்த முடியும் என பிரித்தானிய பிரதமர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் 51வது மனித உரிமைகள் பேரவையின் அணுகுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்த இலங்கை அரசாங்கத்திற்கு சந்தர்ப்பம் கிடைக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விடயங்களில் உண்மையான மற்றும் உறுதியான முன்னேற்றத்தை அடைய பிரித்தானியா மற்றும் சர்வதேச சமூகத்தில் உள்ள ஏனைய தரப்பினர் இலங்கையுடன் இணைந்து செயற்பட வேண்டும் எனவும் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அண்மையில் அறிவிக்கப்பட்ட அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் வர்த்தகத் திட்டத்தை நினைவுகூர்ந்த பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன், ஐக்கிய இராச்சியத்திற்கு ஏற்றுமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களிலும் பெரும்பாலானவற்றை வரியில்லா அணுகல் மூலம் இலங்கைக்கு பயனளிக்கும் வாய்ப்பை வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இலங்கை தனது 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது இரு நாடுகளுக்கும் இடையில் ஆழமான வலுவான ஒத்துழைப்பை மேலும் கட்டியெழுப்ப முடியும் என நம்புவதாக பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தனது செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *