(UTV | கொழும்பு) – சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியின் உறவை முறித்துக் கொள்ளப் போவதாக மிகத் தெளிவான அறிகுறி ஒன்றை தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் 76ஆவது மாநாட்டின் போது உரையாற்றிய அமைச்சர் பெர்னாண்டோ, நாட்டைக் கட்டியெழுப்பும் பொறுப்பை தனிநபராக ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு மீண்டும் ஆதரவளிப்பதாகத் தெரிவித்தார்.
2020 ஆம் ஆண்டு ஐக்கிய மக்கள் சக்தியினை உருவாக்குவதற்கு முன்னர் தான் உணர்ந்ததை விட வேறுவிதமாக உணரவில்லை என்றும், தனது மூதாதையர் வீட்டிற்கு திரும்பியது போல் தான் உணர்கிறேன் என்றும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கூறினார்.
தன்னை மீண்டும் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைத்துக் கொள்ள அனுமதிக்கக் கூடாது என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்த கருத்துக்கு பதிலளித்த அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ, மீண்டும் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணையும் எண்ணம் இல்லை என்று தெரிவித்தார்.
நாடு எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முன்வருவதற்கு கட்சி விரும்பாததால், ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதற்காக தாம் கட்சியிலிருந்து விலகியதாக அமைச்சர் கூறினார்.
ஜனாதிபதி தனிப்பட்ட நபர்களை அணுகவில்லை என்றும், மக்களின் பிரச்சினைகளுக்கு பதில் வழங்குவதற்கு அனைத்து தரப்பினரையும் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுத்துள்ளதாக அமைச்சர் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக மக்கள் நினைத்துப் பார்க்க முடியாத துன்பங்களை அனுபவித்து வருவதாகவும், இது அரசியல் விளையாடுவதற்கான நேரம் அல்ல என்றும் அவர் கூறினார்.
நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 134 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் ஜனாதிபதியாக பதவியேற்றார் எனவும், எனினும் தமது கட்சிக்கு வேறு பிரதிநிதித்துவம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த அதிகமானோர் ஜனாதிபதிக்கு தமது ஆதரவை வழங்கத் தயாராக இருப்பதாக அமைச்சர் பெர்னாண்டோ குறிப்பிட்டார்.
எனவே இலங்கையின் முன்னேற்றத்திற்காக அனைத்து தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும் என்றார்.