(UTV | கொழும்பு) – தற்போது மேலும் 10 அமைச்சரவை அமைச்சர்கள் நியமிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக அரசாங்கத்தின் பிரதம கொறடாவும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
தற்சமயம் மேலும் 10 அமைச்சரவை அமைச்சர்கள் நியமிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால் மேலும் அமைச்சர்கள் நியமிக்கப்பட வேண்டும் என தாம் நம்புவதாகவும் இதன் மூலம் மொத்த அமைச்சர்களின் எண்ணிக்கை 30 ஆக உயரும் என்றும் அமைச்சர் கூறினார்.
“தற்போதைய அமைச்சர்களுக்கு பல அமைச்சுக்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் புதிய அமைச்சர்கள் விரைவில் நியமிக்கப்பட வேண்டும். புதிய அமைச்சர்களை நியமிப்பதன் மூலம் சில அமைச்சுக்களை அவர்களுக்கு வழங்க முடியும், இது தற்போதைய அமைச்சர்களின் சுமையை குறைக்கும்,” என்று அவர் விளக்கினார்.
இது தொடர்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, அரசாங்கத்தின் மேலதிக செலவுகள் தொடர்பில் எவ்வித குற்றச்சாட்டுக்களையும் முன்வைக்க முடியாது என இதன் மூலம் சுட்டிக்காட்டினார்.
கூடுதல் செலவு செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தால், அனைத்து அமைச்சர்களும் தங்கள் எம்.பி.க்களின் சம்பளத்தை எடுக்காமல் பணியாற்ற வேண்டும், அது சாத்தியமில்லை என்று கூறினார்.
குறிப்பிட்ட சில அரச அதிகாரிகள் அதிக சம்பளம் பெறுவதாகவும், இது ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் சம்பளத்தை விட 10-15 மடங்கு அதிகமாக இருப்பதாகவும், அப்படியானால் அவை முதலில் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
எதிர்க்கட்சிகள் அரசாங்கத்திற்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதற்கு இவையே காரணம் எனவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.