(UTV | பீஜிங்) – சீனாவில் கம்யூனிஸ்டு கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு 2013-ம் ஆண்டு முதல், ஜனாதிபதி பதவியில் ஜி ஜின்பிங் இருந்து வருகிறார்.
சீன கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய மாநாடு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும். இதில் கட்சியின் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுவார். அவரே ஜனாதிபதியாக இருப்பார்.
இதில் சீன கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய மாநாடு கடந்த 16ம் திகதி தலைநகர் பிஜீங்கில் தொடங்கியது. இதில் 3-வது முறையாக ஜனாதிபதியாக நீடிப்பதற்கான நடவடிக்கைகளில் ஜின்பிங் தீவிரமாக செயல்பட்டார்.
ஒரு வாரம் நடந்த இந்த மாநாடு நேற்று முடிவடைந்தது. இதில் ஜனாதிபதி ஜின்பிங் பேசியபோது, தனது ஆட்சியில் செய்யப்பட்ட சாதனைகளை பட்டியலிட்டு பேசினார். மேலும் எதிர்க்கட்சி நடவடிக்கைகள் குறித்தும் விளக்கம் அளித்தார்.
2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பங்கேற்ற சீன ஆளும் கம்யூனிஸ்டு கட்சி மாநாட்டில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. கட்சி செயல்பாடு, அடுத்த பொதுச்செயலாளர் தேர்வு உள்ளிட்டவை குறித்து விவாதித்தனர். மாநாட்டில் 205 உறுப்பினர்களை கொண்ட புதிய மத்திய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த குழு இன்று காலை கூடி கட்சியின் பொதுச் செயலாளரை தேர்ந்தெடுத்தது.
ரகசிய வாக்கெடுப்பு மூலம் நடத்தப்பட்ட இந்த தேர்வு முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதில் ஜின்பிங் மீண்டும் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
இதன் மூலம் ஜின்பிங் 3-வது முறையாக ஜனாதிபதியாக தேர்வாகிறார்.