“ராஜித உட்பட பலர் அரசுக்கு ஆதரவாம்..”

“ராஜித உட்பட பலர் அரசுக்கு ஆதரவாம்..”

(UTV | கொழும்பு) – முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளத் தயாராக இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.

வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னரோ அல்லது பின்னரோ மிக விரைவில் இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு அரசாங்கத்துடன் இணைந்து கொள்வதாகவும், அவர்களுக்கு என்ன அமைச்சுப் பதவிகள் வழங்குவது என்பதை ஜனாதிபதி தீர்மானிப்பார் எனவும் ரத்னப்பிரிய தெரிவித்தார்.

இந்த நாட்டில் பொருளாதாரம், விவசாயம், சுகாதாரம், கல்வி, வர்த்தகம் உள்ளிட்ட பல முக்கிய துறைகள் முகாமைத்துவம் செய்யப்பட வேண்டியுள்ளதாகவும், அதற்கமைவாக இந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பல்வேறு பொறுப்புகளை ஏற்க வேண்டியுள்ளதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்திருந்தார்.

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொடர்பில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு சாதகமான எண்ணம் இருப்பதாகவும், அவரும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்துடன் இணைந்து கொள்வதற்கு விருப்பமுள்ளவர்கள் என்பது தமக்கு தெரியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்தினால் கவரப்பட்டு பெருமளவான மக்கள் அரசாங்கத்தில் இணைந்து கொண்டாலும் அந்தளவுக்கு பொறுப்புக்களை வழங்க முடியாத பிரச்சினை எழுந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

தற்போதைய ஜனாதிபதி செலவுகளை குறைத்துள்ளதாக தெரிவித்த ரத்னப்பிரிய, ஜனாதிபதி மாளிகையில் சாதாரண தேநீர் மட்டுமே அருந்த முடியும் எனவும் பால் தேநீர் அருந்தினால் அதற்கு பணம் செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

COMMENTS

Wordpress (0)
Disqus ( )