ஐந்து கிராமிற்கு அதிகமான ஐஸ் போதைப்பொருளை வைத்திருப்பவர்களுக்கு மரண தண்டனை!

(UTV | கொழும்பு) –     ஐந்து கிராமிற்கு அதிகமான ஐஸ் போதைப்பொருளை வைத்திருப்பவர்களுக்கு மரண தண்டனை வழங்குவதற்கு உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளதென நீதி மற்றும் சிறைச்சாலைகள் விவகார இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

அதன் படி குற்றம் நிரூபிக்கப்பட்டால், அந்நபர் பாடசாலை மாணவராக இருப்பினும் அவருக்கு மரணதண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்கப்படுமென இதன் மூலம் தெரிவிக்கப்படுகின்றது.நேற்று அமுலுக்கு வந்த விஷம், அபின் மற்றும் ஆபத்தான மருந்துகள் தொடர்பான திருத்தச் சட்டம் 2022 இன் 41 இழக்க சட்டத்தின் கீழ் குறித்த அதிகாரம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை எதிர்கால சந்ததியினரை பாதுகாப்பதற்காகவும், நாட்டை சரியான பாதையில் செலுத்துவதற்காகவும் இந்த திருத்தங்கள் கொண்டுவரப்பட்டதாகவும், நாட்டைக் கட்டியெழுப்ப எதிர்கால சந்ததியினரைப் பாதுகாக்க முடியாவிட்டால் பயனில்லை எனவும், இது தொடர்பில் பெற்றோர்கள் மற்றும் சமயத் தலைவர்கள் கவனம் செலுத்த வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த இராஜாங்க அமைச்சர்,

“ஐஸ் பயன்படுத்துவது ஆபத்தானது என்றாலும், முந்தைய சட்டங்களின்படி ஹெராயின் மீது மட்டுமே சட்டம் அமுல்படுத்தப்பட்டது. எனினும் இன்றைய நிலவரப்படி, நாடு கடுமையான போதைப்பொருள் பிரச்சினைகளை எதிர்கொண்டுவருகின்றது. புள்ளிவிவரங்களின்படி, இதுவரை மொத்தம் 26,000 பேர் சிறையில் உள்ளனர். மொத்தத்தில் 16,000 பேர் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். போதைப்பொருள் பாவனையானது 16,000 பேரில் 65% பேரை சிறையிலடைத்தது,” என சுட்டிக்காட்டினார்.

அரசாங்கம் மற்றும் ஜனாதிபதியின் ஆலோசனையுடன், இந்த நிலைமையை அடக்குவதற்கான  அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கப்படுமென அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *