சிவன் ஆலயமா? விகாரையா ? – நாட்டை நாசமாக்கும் அரசு: வேலுகுமார் ஆவேசம்

(UTV | கொழும்பு) –

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் பயிற்சி பெற்றவர் நாட்டில் உள்ளார் என அரசாங்கத்தின் பொறுப்பு வாய்ந்த ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

குருந்தூர் மலை விவகாரம் இலங்கையில் மீண்டும் இனவாத கலவரத்தை தோற்றுவிக்கும் என இந்திய புலனாய்வு பிரிவினர் இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஆட்சியதிகாரத்தை கைப்பற்ற மக்களை பலியாக்க வேண்டாம் என்பதை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (23) இடம்பெற்ற ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

வங்குரோத்து நிலையில் இருந்து மீட்சியடையும் திட்டத்தில் வெளிநாட்டு முதலீடுகள் முக்கியமானதாக உள்ளது.கொழும்பு துறைமுக நகர திட்டம் முக்கிய வெளிநாட்டு முதலீட்டு திட்டமாக காணப்படுகிறது.

ஜனாதிபதித் தேர்தல் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ள நிலையில் இனவாதம் மற்றும் மதவாத கருத்துக்களும் வெளிப்படைத் தன்மையாக தோற்றம் பெற்றுள்ளது.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் மற்றும் 13 பிளஸ் என்று குறிப்பிட்டுக் கொண்டு ஜனாதிபதி கருத்து முரண்பாடுகளை தோற்றுவித்துள்ள நிலையில் குருந்தூர் மலை சிவன் ஆலயமா? அல்லது பௌத்த விகாரையா ?என்ற முரண்பாடு தோற்றம் பெற்றுள்ளது.

மறுபுறம் கிழக்கு மாகாணத்தில் மயிலத்தமடு,மாதவனை பகுதியில் சர்வமத தலைவர்கள் தடுத்து வைக்கப்பட்டு அங்கும் பிரச்சினை தோற்றம் பெற்றுள்ளது. மலையகத்தில் 1983 ஆம் ஆண்டு கால சூழலை போல் தமிழ் குடும்பம் அடாவடித்தனமாக வெளியேற்றப்பட்டுள்ளது.

சிரியாவின் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் பயிற்சிப் பெற்றவர்கள் நாட்டில் உள்ளார்கள் என அரசாங்கத்தின் பொறுப்பு வாய்ந்த தரப்பினர் குறிப்பிடுகிறார்.

இவ்வாறான பின்னணியில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்,சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு எவ்வாறு வருகை தருவார்கள்.

குருந்தூர் மலை விவகாரத்தை தொடர்ந்து இலங்கையில் மீண்டும் இனவாத முரண்பாடுகள் தோற்றம் பெறும் சாத்தியம் காணப்படுவதாக இந்திய புலனாய்வு தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.

இவ்வாறான சூழலில் எவ்வாறு வெளிநாட்டு முதலீட்டுகளை பெற்றுக்கொள்ள முடியும். சுற்றுலாத்துறையை மேம்படுத்த முடியும். இன்றும் நாடு வங்குரோத்து நிலையில் இருந்து மீளவில்லை.

மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக ஒரு தரப்பினர் இனவாதம் மற்றும் மதவாத வெறுப்பு பேச்சுக்களை கட்டவிழ்த்து விட்டுள்ளார்கள். இவ்விடயம் குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும்.

இந்த விடயம் குறித்து அரசாங்கம் தனது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. அதிகாரத்தை கைப்பற்ற மக்களை பலியாக்க வேண்டாம் என்பதை வலியுறுத்துகிறேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *