சரத் வீரசேகரவின் பாராளுமன்ற உரை உண்மைக்கு புறம்பானது – ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான்.

(UTV | கொழும்பு) –

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சனல் போ ஒளிபரப்பிய நேர்காணல் தொடர்பில் பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற விவாதத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவின் உரையில்; “இஸ்லாமிய மத சிந்தனையின்படி” தீவிரவாதிகளால் தாக்குதல் நடத்தப்பட்டது என்ற அறிக்கையை நான் முற்றிலும் கண்டிக்கிறேன் என கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினரும், ஜனாதிபதி செயலணியின் முன்னாள் உறுப்பினருமான ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும், தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியது அமைதியான இஸ்லாம் மார்க்கத்தை அடிப்படையாக கொண்டு அல்ல மாறாக தீவிரவாத சித்தாந்தக் குழுக்களால் சிதைக்கப்பட்ட மதச் சிந்தனைகள் மூலம்தான் அவர்கள் தாக்குதல் நடத்தினார்கள். இஸ்லாத்தில் தற்கொலை தாக்குதல் முற்றுமுழுதாக தடைசெய்யப்பட்ட ஒன்றாகும். இஸ்லாம் இவ்வாறான செயல்களை நேரடியாகவே எதிர்க்கிறது என்பதை நான் பாராளுமன்ற உறுப்பினர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவுக்கு வலியுறுத்துகிறேன். போலியான ஒப்பந்தச் சித்தாந்தத்தை கொண்ட தீவிரவாதி ஸஹ்ரான் உட்பட அவரின் குழு என்று சொல்லப்படுபவர்கள் உலகளாவிய புவிசார் அரசியல் சதிக்கு ஆயுதமாகப் பயன்படுத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்க முடிகிறது. ஆனால் அதை உறுதிப்படுத்த முடியாது உள்ளது.

மேலும், ஷங்ரிலாவில் மட்டும் ஏன் இரண்டு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன? தாஜ் மீதான தற்கொலை குண்டுவெடிப்பு ஏன் மாற்றப்பட்டு தெஹிவளைக்கு கொண்டு செல்லப்பட்டது? அபு ஹிந்த் என்பவர் யார்? சாரா தப்பிக்க உதவிய ஒரு பொலிஸ் அதிகாரி ஏன் கைது செய்யப்பட்டார்? இப்படிப் பல கேள்விகளுக்கு முஸ்லிம் சமூகம் பதில் தேடுவதுடன் இதுபற்றி சிந்தித்துப் பதில் தேடும் அளவுக்கு முஸ்லிம் சமூகம் புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் சனல் ஃபோர் போன்ற இஸ்லாமிய விரோத ஊடகங்களின் பின்னால் நாம் சென்றிருக்க மாட்டோம்

போலியான கடும்போக்கு மார்க்க சிந்தனைக்கு உட்பட்ட ஸஹ்ரான் போன்றவர்கள் பூகோள அரசியலுக்கு பயன்படுத்தப்பட்டிருந்தால் அதிலிருந்து முஸ்லிங்கள் கற்க வேண்டிய பாடம் என்னவென்றால் எதிர்கால சந்ததிகளை இவ்வாறான போலியான கடும்போக்கு சிந்தனைகளிலிருந்து பாதுகாப்பது தான். அத்தோடு பல்லின சமூகம் வாழும் எமது நாட்டில் முஸ்லிம் சமூகம் இஸ்லாத்தின் கொள்கைகள் பற்றி ஏனைய இன சகோதர்களுக்கு விளக்கவேண்டியது அவசியமாகிறது. சுதந்திர போராட்டத்திலும் சரி, உள்நாட்டு யுத்தகாலத்திலும் சரி நாட்டுக்கு ஆபத்து வரும் சந்தர்ப்பங்களில் எல்லாம் நாட்டை பாதுகாக்கும் பணியில் முஸ்லிம் சமூகம் கடந்த காலங்களில் கவசமாக நின்று பாதுகாத்திருக்கிறது. இனியும் அப்படி பாதுகாக்க முன்நிற்கும் என்பதில் ஐயமில்லை

ஸஹ்ரான் போன்றவர்களின் சதிவலையில் முஸ்லிம் சமூகத்தை வீழ்த்தி சர்வதேச நிகழ்ச்சிநிரல்களில் இலங்கை முஸ்லிங்களை அகப்படுத்த முடியாது. இலங்கை வாழ் முஸ்லிம் சமூகம் தேசப்பற்றுள்ள இலங்கையர்களாக வாழ்பவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *