டிஜிட்டல் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதன் மூலம் 15 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம்!

(UTV | கொழும்பு) –

 

டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்துவதன் மூலம் 2030 ஆம் ஆண்டளவில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு 15 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப தொழில்துறை சம்மேளனத்தின் பொருளாளர் இந்திக டி சொய்சா தெரிவித்தார்.
தற்போது டிஜிட்டல் பொருளாதாரம், மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு 3.7 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை வழங்குவதாகவும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின்படி நடைமுறைப்படுத்தப்படும் “DIGIECON Sri Lanka 2030” வேலைத்திட்டத்தின் மூலம் 15 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இலக்கை அடைவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் இந்திக டி சொய்சா சுட்டிக்காட்டினார்.
“தேசிய தகவல் தொழில்நுட்ப மாநாடு – 2023” குறித்து ஊடகங்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

“நிலைபேறான டிஜிட்டல் சமூகத்தை நோக்கி” என்ற தொனிப்பொருளில், தேசிய தகவல் தொழில்நுட்ப மாநாட்டை 41ஆவது தடவையாகவும் இலங்கை கணனி சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.மேலும் இங்கு கருத்துத் தெரிவித்த இந்திக டி சொய்சா,
“நிலைபேறான டிஜிட்டல் சமூகத்தை நோக்கி” என்ற அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வைக்கு அமைவாக டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி நகரும் DIGIECON 2030 வேலைத்திட்டத்தின் ஊடாக இலங்கையின் பொருளாதாரத்தை விரைவுபடுத்துவதற்கு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதே இதன் பிரதான நோக்கமாகும். தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத்தின் வழிகாட்டலின் கீழ் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இந்நாட்டில் தொழில்நுட்பத்தை வலுவூட்டுவது குறித்து முன்னுரிமை வழங்கியதற்காக அரசாங்கத்திற்கு பாராட்டுகின்றேன்.

இன்று அனைவரும் டிஜிட்டல் பொருளாதாரம் பற்றி பேசுகிறார்கள். உலகின் முன்னேறிய நாடுகள் டிஜிட்டல் பொருளாதாரம் மூலம் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு வழங்கப்படும் பங்களிப்பு சுமார் 40% ஆகும். ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் 20% பங்களிப்பு வழங்கப்படுகிறது. எமது நாட்டில் டிஜிட்டல் பொருளாதாரத்தின் மூலம் தற்போது வழங்கப்படும் 5% பங்களிப்பை 20% ஆக உயர்த்தும் இயலுமை எம்மிடம் உள்ளது.
மேலும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு தற்போது வழங்கப்படும் பங்களிப்பான 3.7 பில்லியன் அமெரிக்க டொலர்களை 2030 ஆம் ஆண்டிற்குள் 15 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.

DIGIECON 2030 அரசாங்கத்தின் வேலைத்திட்டத்துடன் இணைந்ததாக அடுத்த 07 ஆண்டுகளுக் கான வழிகாட்டுதல் தொகுப்பு தயாரிக்கப்பட்டு வருகிறது. டிஜிட்டல் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதன் மூலம் இலங்கை மக்களின் தொழிநுட்ப அறிவை மேம்படுத்துவதில் இன்று ஒரு செயலூக்கப் பங்களிப்பின் தேவை உள்ளது.
2030 ஆண்டுக்குள் டிஜிட்டல் பொருளாதார பிரதான திட்டம் மற்றும் கண்காணிப்புக் கொள்கைக் கட்டமைப்பை வெளியிடவும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நாட்டில் டிஜிட்டல் பொருளாதாரத்தை விரைவுபடுத்த இது ஒரு முக்கிய காரணியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
இந்த ஆண்டு மாநாட்டில் ஆறு முக்கிய நோக்கங்களுடன், முப்பதுக்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச பேச்சாளர்கள் விரிவுரைகளை வழங்க உள்ளனர். நிதித் தொழில்நுட்பம், கல்வித் தொழில்நுட்பம், சுற்றுலாத் தொழில்நுட்பம், தகவல் பாதுகாப்பு, விவசாயத் தொழில்நுட்பம், இலத்திரனியல் சுகாதார சேவைகள் ஆகிய ஆறு தலைப்புகளில் இந்த மாநாட்டை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிகழ்வுடன் இணைந்து, நாட்டில் உள்ள சிறந்த கணனி வல்லுநர்களுக்கு பரிசுகள் வழங்கவும், கணனித் துறையில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு மாநாட்டின் தனித்துவமான வேலைத்திட்டமாக டிஜிட்டல் முதலீட்டு மாநாட்டை குறிப்பிடலாம். நாட்டில் உள்ள அனுபவமிக்க தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு சாத்தியமான முதலீட்டாளர்களை அடையாளம் காண்பதையும் தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதியில் 03 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்ற இலக்கை அடைவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இதற்கு, இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப முகவர் நிறுவனம் வழங்கிய ஆதரவைப் பாராட்ட வேண்டும். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரச அனுசரணையுடன் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத், தொழில்நுட்ப அமைச்சு மற்றும் இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனமும் இதற்கு ஆதரவளித்து வருகின்றது.
இலங்கை கணனி சங்கத்தின் தலைவர் கலாநிதி அஜந்தா அத்துகோரல, தேசிய தகவல் தொழில்நுட்ப மாநாட்டின் இணைத் தலைவர் கலாநிதி நிரோஷா வெதசிங்க, இலங்கை கணனி சங்க செயலாளர் ஹேஷான் கருணாரத்ன, DIGIECON 2023 -2030 திட்டப் பணிப்பாளர் பிரசாத் சமரவிக்ரம, இலங்கை கணனி சங்க உறுப்பினர் கலாநிதி அமல் இலேசிங்க ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *