கிழக்கு முனையத்தின் பணிகள் 2024 ஜூன் மாதம் ஆரம்பம்!

(UTV | கொழும்பு) –

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் முதற்கட்ட கட்டுமானப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டு அவற்றின் செயற்பாடுகள் எதிர்வரும் 2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் ஆரம்பிக்கப்படவிருப்பதாக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்தது. வலுசக்தி மற்றும் போக்குவரத்துப் பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழு அதன் தலைவர் நாலக பண்டார கோட்டேகொட தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே அமைச்சின் அதிகாரிகள் இதனைத் தெரிவித்தனர்.

துறைமுக அதிகாரசபை (திருத்தச்) சட்டமூலம், 2022ஆம் ஆண்டுக்கான விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) லிமிடெட் நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை, துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சின் 2022ஆம்ஆண்டுக்கான செயலாற்றுகை அறிக்கை என்பவற்றை ஆராய்வதற்காக குறித்த அமைச்சு மற்றும் விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) லிமிடெட் நிறுவனம் ஆகியவற்றின் அதிகாரிகள் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தனர். இதில் இலங்கை துறைமுக அதிகாரசபை (திருத்தச்) சட்டமூலத்துக்கு குழுவில் அனுமதி வழங்கப்பட்டது.
கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் கட்டுமானப் பணிகளில் 20 சதவீத முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும், 2025ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இதனை முழுமையாகப் பூர்த்திசெய்யத் திட்டமிட்டிருப்பதாகவும் அமைச்சின் அதிகாரிகள் குழு முன்னிலையில் தெரிவித்தனர்.

கொழும்புத் துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் நிர்மாணப் பணிகளில் 20 சதவீத முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அதன் நிர்மாணப் பணிகள் 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன், 2022ஆம் ஆண்டு யூன் மாதத்தின் பின்னர் தமது நிறுவனம் இலாபம் ஈட்டும் நிலைக்கு வந்திருப்பதாக விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) லிமிடட் நிறுவனம் தெரிவித்தது. இதற்கு அமைய இவ்வருடத்தின் முதல் 7 மாதங்களில் தமது நிறுவனத்தின் நிகர லாபம் 18 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது. உலகெங்கிலும் உள்ள விமான போக்குவரத்து தொடர்பான பணியாளர்கள் மற்றும் ஆராய்ச்சி குழுக்களுக்கான சர்வதேச மாநாடு இந்த ஆண்டு டிசம்பர் 10 ஆம் திகதி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியரர்) லிமிடட் நிறுவனத்தின் தலைவர் தெரிவித்தார். அதற்காக உலகின் முன்னணி விமான நிறுவனங்களின் தலைவர்கள் உட்பட பல அமைப்புகள் வரவுள்ளன.

அடுத்த நூற்றாண்டில் இலங்கையின் புவியியல் அமைவிடத்தைப் பயன்படுத்திக் கொண்டு, கடல் மற்றும் விமான சேவைகள் தொடர்பாக இலங்கைக்குக் கிடைக்கும் வாய்ப்புகள் குறித்துத் தேசியக் கொள்கையொன்றில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் குறித்து தலைவர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அதன்படி இதுவரை தயாரிக்கப்பட்ட தேசிய கொள்கை வரைவு குழுவிற்கு அனுப்பி வைக்கப்படும் என அதிகாரிகள் குழுவிடம் தெரிவித்தனர்.
அத்துடன், இலங்கையில் பொருட்களை விநியோகிக்கும் போது கடல் மார்க்கமாக பொருட்களை கொண்டு செல்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறும் அமைச்சின் அதிகாரிகளுக்குக் குழு ஆலோசனை வழங்கியது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *