(UTV | கொழும்பு) –
வடக்கு,கிழக்கில் எதிர்வரும் 20ஆம் திகதி பூரண ஹர்த்தால் அனுஷ்டிப்பதற்கு முஸ்லிம் தரப்பின் பூரண ஆதரவுடன் தமிழ்க் கட்சிகள் ஏகோபித்த அழைப்பு விடுத்துள்ளதோடு அனைத்து தரப்பினரது ஒத்துழைப்புக்களையும் கோரியுள்ளன. வடக்கு, கிழக்கில் பூரண ஹர்த்தாலை முன்னெடுப்பதற்கான இறுதி திகதியை தீர்மானிப்பதற்கான கலந்துரையாடல் நேற்று யாழ்.தந்தை செல்வா அரங்கில் பிற்பகல் 3 மணிக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோரின் பங்கேற்புடன் நடைபெற்றபோதே மேற்கண்டவாறு ஏகோபித்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
குறித்த கலந்துரையாடலில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா, தமிழ் மக்கள் கூட்டணியுன் தலைவர் சி.வி விக்னேஸ்வரன், புளொட் தலைவர் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் சிறீகாந்தா, எம்.கே. சிவாஜிலிங்கம், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் மற்றும், ரெலோ சார்பில் தியாகராஜா நிரோஷ் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர். இக்கலந்துரையாடலில் ஆரம்பத்தில் எதிர்வரும் 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்படுவதற்கு முஸ்தீபுச் செய்யப்பட்ட ஹர்த்தாலை பிற்போட வேண்டும் என்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 15ஆம் திகதி நடைபெறவிருப்பதால் அதற்கு இடையூறுகள் ஏற்படுத்தக்கூடாது என்ற விடயத்தில் பங்கேற்பாளர்கள் கரிசனைகளைச் செலுத்தினார்கள்.
அத்துடன், வெள்ளிக்கிழமை ஹர்த்தாலுக்கான அழைப்பு விடுக்கப்படுகின்றபோது முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு தயாராக உள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட முஸ்லிம் தரப்புக்களின் நிலைப்பாடு குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. இதனையடுத்து, முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா உயிரச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியமை தொடர்பில் முழுமையான நீதிவிசாரணை நடத்தவேண்டும், சிறுபான்மை தேசிய இனங்களுக்கு நீதி மறுக்கப்படுகின்றமை முடிவுக்க கொண்டுவர வேண்டும், நீதித்துறையின் சுயாதீனம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மையப்படுத்தி ஈற்றில் 20ஆம் திகதி வடக்கு கிழக்கில் பூரணமான ஹர்த்தாலை முன்னெடுப்பதென ஏகோபித்த தீர்மானம் எடுக்கப்பட்டு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්