ஐக்கிய தேசிய கட்சியை எவராலும் அழித்துவிட முடியாது – ரவி கருணாநாயக்க.

(UTV | கொழும்பு) –

அடிப்படைவாதத்தால் தற்காலிகமாக வீழ்த்தப்பட்டாலும், ஐக்கிய தேசிய கட்சியை எவராலும் ஒட்டுமொத்தமாக அழித்துவிட முடியாது. எனவே அதிகாரத்தை கைப்பற்றி நாட்டை அபிவிருத்தியடையச் செய்வதற்கான பயணத்தில் அனைவரையும் தம்முடன் கைகோர்க்குமாறு ஐ.தே.கவின் வடகொழும்பு அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான ரவி கருணாநாயக்க அழைப்பு விடுத்தார்.

ஐ.தே.க.வின் விசேட சம்மேளனம் கொழும்பு – சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெற்றபோது, வரவேற்புரை நிகழ்த்துகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். ”ஐ.தே.கவின் 77ஆவது சம்மேளனம் மாத்திரமின்றி, கட்சிக்கான புதிய யாப்பும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமையால் இது விசேட சம்மேளனமாக அமைந்துள்ளது 2015இல் பொருளாதாரம் கட்டியெழுப்பப்பட்டு கையளிக்கப்பட்ட நாடு, 2022இல் மீண்டும் வங்குரோத்து நிலைக்கு உள்ளாக்கப்பட்டு ஐ.தே.க.விடம் கையளிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளால் கற்பனைக் கதைகளைக் கூற முடியும். நாட்டை குழப்ப முடியும். அடிப்படைவாதத்தை தோற்றுவிக்க முடியும். இனவாதம், அடிப்படைவாதம், மதவாதம் போன்ற தீவிரவாதங்களை ஏற்படுத்த முடியும்.

இவ்வாறான செயற்பாடுகளால் ஐ.தே.க. தற்காலிகமாக வீழ்த்தப்பட்டாலும், ஒருபோதும் இக்கட்சியை முற்றாக இல்லாதொழிக்க முடியாது என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றேன். 2015இல் பொருளாதாரம் முற்றாக வீழ்ச்சியடைந்த நிலையில் இந்நாட்டை தற்போதைய ஜனாதிபதி, அன்றைய பிரதமராக பொறுப்பேற்றார். அதன் பின்னர் 30 மாதங்களுக்குள் அரசாங்கத்தின் வருமானத்தை நூறு வீதமாக அதிகரிக்க எம்மால் முடிந்தது.
எம்மால் மிகவும் கஷ்டப்பட்டு கட்டியெழுப்பப்பட்ட இந்நாட்டின் பொருளாதாரம் மிகக் குறுகிய காலத்தில் முற்றாக சீர்குலைக்கப்பட்டு, நாடு வங்குரோத்து நிலைக்கு உள்ளாக்கப்பட்டது.

எவ்வாறிருப்பினும் பாராளுமன்றத்தில் தனி யானையாக சவாலை ஏற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இன்று அந்த சவாலில் வெற்றி பெற்றுள்ளார். பொது வெளியில் விமர்சித்துக் கொண்டிருப்பவர்கள், மறைமுகமாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் மாத்திரமே நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியும் என்பதை ஏற்றுக்கொண்டுள்ளனர். நாடு வீழ்ச்சியடைந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும், ஐ.தே.க. அதனை மீட்டாலும் மக்கள் ஆணை கிடைக்கவில்லை. சில சந்தர்ப்பங்களில் தாய் வீட்டின் உறுப்பினர்களைப் பார்த்துக்கொள்வதில் ஏற்பட்ட தோல்வியும் அதற்கான ஒரு காரணமாகும். கசப்பானாலும் உண்மையைக் கூற வேண்டியது அவசியமாகும். இதன் காரணமாகவே கடந்த தேர்தலில் 30 இலட்சம் வாக்குகளை இழக்க நேரிட்டது. இதன் மூலம் மக்கள் வழங்கிய செய்தியை புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும்.

இன்று புதிய யாப்புடன் புதிய பயணத்தை தொடங்க வேண்டும். அதற்கமைய மீண்டும் நிர்வாக அதிகாரத்தைப் பெறும் நிலைக்கு 2024இல் கட்சியை வலுப்படுத்த வேண்டியது அவசியமாகும். எம்மில் குறைபாடுகள் காணப்படலாம். அவற்றை சரி செய்து முன்னோக்கி பயணிப்பதற்கான காலம் தற்போது உருவாகியுள்ளது. எனவே அதிகாரத்தை கைப்பற்றி, நாட்டை அபிவிருத்தியடைச் செய்வதற்கு எம்முடன் கைகோர்க்குமாறு அழைப்பு விடுக்கின்றேன்” என அவர் தெரிவித்தார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *