(UTV | கொழும்பு) –
அரசியல் தீர்வு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயற்பாடுகள் நம்பிக்கைக்குரியனவாக இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில் ” அடுத்த வருடத்துக்குள் அரசியல் தீர்வு காண்பேன் என்று கடந்த வருடம் அவர் பகிரங்கமாக தெரிவித்திருந்தார். ஆனால், அவர் கூறியமைக்கமைய இந்த வருடம் தீர்வு தொடர்பில் எந்த முன்னேற்றகரமான செயற்பாடுகளும் இதுவரை இடம்பெறவில்லை.
அரசு விரைவாகத் தீர்வு காணாவிட்டால் நாம் சர்வதேசத்தின் உதவியுடன் தீர்வை வென்றெடுக்கும் செயற்பாடுகளில் களமிறங்குவோம் என்று இந்த தருணத்தில் கூறிவைக்க விரும்புகின்றேன்.
தீபாவளி பண்டிகையை இலங்கையிலும், புலம்பெயர் தேசமெங்கும் இன்று கொண்டாடும் இந்து மக்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
இலங்கையில் தேசிய இனப்பிரச்சினையால் தமிழ் மக்கள் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து வந்துள்ளார்கள். இப்போதும் அவர்கள் பேரினவாத அடக்குமுறைக்குள் வாழ்ந்து வருகின்றார்கள்.
எனவே, தமிழ் மக்களுக்கு மிக விரைவில் தீர்வு கிடைக்க வேண்டும் என்றும், அதற்கான கருமங்கள் முன்னெடுக்கப்பட நாம் அனைவரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம் என்றும் இன்றைய தீபாவளித் திருநாளில் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.
அரசியல் தீர்வு விடயத்தில் எமது நிலைப்பாட்டில் எந்த விட்டுக்கொடுப்புக்கும் இடமில்லை என்பதையும் கூறிவைக்க விரும்புகின்றேன். புதிய அரசமைப்பு கட்டாயம் உருவாக்கப்பட வேண்டும். அதனூடாகவே தீர்வு காணப்பட வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්