வெள்ள அனர்த்தம்: கொலன்னாவ,களனி மற்றும் அம்பத்தளை பிரதேசங்களுக்கு ஜனாதிபதி விஜயம்

  •  வெள்ளத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் களனி கங்கைக் கரையோரப் பகுதிகளில் புதிய நிர்மாணங்களை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டாம் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
  • அந்தப் பகுதிகளில் சட்டவிரோதமாக காணிகளை நிரப்ப அனுமதிக்கக் கூடாது
  • முல்லேரியா மற்றும் IDH வைத்தியசாலைகள் வேறு இடத்திற்கு மாற்றப்படும்.
  • பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களின் வீடுகள் மற்றும் சொத்துக்களைப் பாதுகாப்பதற்கான விசேட ஏற்பாடு
  • அனர்த்த நிலைமை குறையும் வரை மக்களுக்கு நிவாரணம் வழங்க முப்படையினர் ஆளனி பலத்துடன் தற்காலிக மத்திய நிலையம்.
  • களனி ஆற்றுப் பள்ளத்தாக்கில் வெள்ளத்தை ஏற்படுத்தும் வகையிலும், மழை நீர் வழிந்தோடுவதைத் தடுக்கும் வகையிலும் மேற்கொள்ளப்படும் புதிய நிர்மாணங்களுக்கு இடமளிக்க வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
  • குறித்த பிரதேசங்களில் சட்டவிரோதமான முறையில் நிலம் நிரப்பப்படுவதை உடனடியாக நிறுத்துவதற்கும் முல்லேரியா மற்றும் IDH வைத்தியசாலைகளை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமைகளைக் கண்டறிவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (03) கொலன்னாவ, களனி, அம்பத்தளை ஆகிய பிரதேசங்களுக்கு மேற்பார்வை விஜயம் மேற்கொண்டார். கொலன்னாவை சேதாவத்த வெஹெரகொட ரஜமஹா விகாரையில் நடைபெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.

பாதிக்கப்பட்டோர் தங்கியுள்ள அம்பத்தளை, கல்வான புராண ரஜமஹா விகாரை, சேதவத்த வெஹெரகொட புராண ரஜமஹா விகாரை, கொலன்னாவ டெரன்ஸ் .எஸ். சில்வா வித்தியாலயம் மற்றும் வெல்லம்பிட்டி காமினி வித்தியாலய பாதுகாப்பு நிலையம் என்பவற்றுக்குச் சென்ற ஜனாதிபதி, மக்களின் நலன்களைக் கேட்டறிந்ததோடு, அவர்களின் தேவைகளைக் கண்டறிந்து அவற்றை தொடர்ச்சியாக பூர்த்தி செய்யும் பணிகளை முன்னெடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.

கொலன்னாவையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று இரவு முதல் உணவு வழங்குமாறு கொலன்னாவை பிரதேச செயலாளருக்கு அறிவித்த ஜனாதிபதி, அந்த மக்களின் சுகாதார மற்றும் பாதுகாப்பு வசதிகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.

வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை, அனர்த்த முகாமைத்துவ திணைக்களம் மற்றும் நீர்ப்பாசன திணைக்களம் என்பவற்றுடன் இணைந்து நிரந்தர வேலைத் திட்டமொன்றை தயாரிக்க வேண்டுமென ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். குழாய்களை பயன்படுத்தி வெள்ளம் வேகமாக வடிந்து செல்ல வழிசெய்து, மக்களை துரிதமாக மீள்குடியேற்றுமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கினார்.

அனர்த்த சூழ்நிலையில் இருந்து பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ள மக்களின் வீடுகளையும் சொத்துக்களையும் பாதுகாக்க விசேட வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க அங்கு சுட்டிக்காட்டினார்.

கொலன்னாவ பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த அவர், பிரஜைகள் பொலிஸாரின் பங்களிப்புடன் நடமாடும் ரோந்து சேவைகளை நடைமுறைப்படுத்த முடியும் எனவும் சுட்டிக்காட்டினார்.

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சுகாதாரமான முறையில் உணவு வழங்க வேண்டும் என்று இராணுவத்தினருக்கு பணிப்புரை வழங்கிய சாகல ரத்நாயக்க, மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவதில் கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவித்தார்.

மேலும், அனர்த்த நிலை குறையும் வரை மக்களுக்கு நிவாரணம் வழங்க முப்படையினர் ஆளணி பலத்துடன் தற்காலிக மத்திய நிலையமொன்றை அமைக்குமாறு அறிவுறுத்திய அவர், வெள்ளம் குறைந்த பிறகு ஏற்படக் கூடிய டெங்கு, எலிக்காய்ச்சல், வயிற்றுப்போக்கு போன்ற தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்த விசேட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.

அனர்த்தம் காரணமாக முற்றாக சேதமடைந்த அனைத்து வீடுகளையும் அரசாங்கத்தின் உதவியுடன் இராணுவத்தினரின் பங்களிப்புடன் நிர்மாணிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், பாராளுமன்ற உறுப்பினர்களான ரியர் அட்மிரல் சரத் வீரசேகர, சட்டத்தரணி பிரேமநாத்.சி.தொலாவத்த, எஸ்.எம்.மரிக்கார், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் தொழிற்சங்க உறவுகள் தொடர்பான பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னபிரிய, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ, கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் உள்ளிட்ட பலர் ஜனாதிபதியுடனான மேற்பார்வை விஜயத்தில் இணைந்துகொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *