இலங்கை கிரிக்கெட்டை சீர்திருத்த அலி சப்ரி அழைப்பு!

இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலத்தை முன்னெப்போதையும் விட வலுவாகவும், வெற்றிகரமானதாகவும் மாற்றுவதற்கு நாம் ஒன்றுபட்டு தீர்க்கமாகச் செயல்படுவோம். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு இலங்கை கிரிக்கெட்டுக்கான புதிய விளையாட்டுச் சட்டம், அரசியலமைப்புடன் சீர்திருத்தங்களை நிறைவேற்ற வேண்டும் என அமைச்சரும், ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் நிலையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவின் தலைவருமான அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

2024 டி20 உலகக் கிண்ணமானது அமெரிக்காவில் ஆரம்பமாகி தற்சமயம் நடைபெற்று வருகிறது.

இதில் இரண்டு போட்டிகளை மாத்திரம் எதிர்கொண்ட இலங்கை அணி, அந்த இரு போட்டிகளிலும் படுதோல்வியை தழுவியுள்ளதுடன், மோசமான செயல் திறனையும் வெளிப்படுத்தியுள்ளது. நியூயோர்க்கில் ஜூன் 3 அன்று நடைபெற்ற தனது முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவுடன் 77 ஓட்டங்களுக்குள் சுருண்டது. அதேநேரம் இன்று டல்லாஸில் நடைபெற்ற ஆட்டத்தில் பங்களாதேஷிடம் 2 விக்கெட்டுகளினால் வீழ்ந்தது. அது மாத்திரமல்லாது டி20 உலகக் கிண்ணத்துக்கு முன்னதான நெதர்லாந்துடனான பயிற்சி ஆட்டத்திலும் தோல்வியை சந்தித்தது. இவ்வாறான நிலையிலேயே அமைச்சர் அலி சப்ரி, தனது எக்ஸ் தளத்தில் இந்த கருத்தினை முன்வைத்துள்ளார்.

அதில் அது குறித்து மேலும் தெரிவித்த அமைச்சர்,

கிரிக்கெட் என்பது இலங்கையின் இதயத்துடிப்பாகும், இது நமது தேசத்திற்கு புன்னகையையும், பெருமையையும், ஒற்றுமையையும் கொண்டு வந்த ஒரு விளையாட்டாகும். எங்களது வெற்றிகள், குறிப்பாக உலகக் கிண்ண வெற்றி, அனைத்து இலங்கையர்களின் இதயங்களிலும் மறக்க முடியாத நினைவுகளை பதித்துள்ளது.

எனினும் கூட இன்று, நமது நேசத்துக்குரிய விளையாட்டு நெருக்கடியில் உள்ளது, ஒரு அவசர மற்றும் விரிவான மறுசீரமைப்புக்கு அழைப்பு விடுக்கும் வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. 2023 ஐசிசி உலகக் கிண்ணம் மற்றும் ஐசிசி டி20 ஆகியவற்றில் சமீபத்திய ஏமாற்றங்கள் தனிமைப்படுத்தப்பட்ட சம்பவங்கள் அல்ல. அவை நமது கிரிக்கெட் உள்கட்டமைப்பிற்குள் ஆழமாக வேரூன்றியிருக்கும் பிரச்சினைகளின் அப்பட்டமான எடுத்துக்காட்டு.

இந்தச் சிக்கல்களைத் தற்காலிகத் திருத்தங்களால் தீர்க்க முடியாது. நமது கிரிக்கெட்டை தனிப்பட்ட நிறுவனமாக மாற்றியவர்களின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கும் துணிச்சலான, தொழில்முறை அணுகுமுறைதான் நமக்குத் தேவை. நமது கிரிக்கெட்டின் நிலையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவின் தலைவர் என்ற வகையில், சீர்திருத்தத்திற்கான அவசரத் தேவையை என்னால் சான்றளிக்க முடியும்.

மேலும் புதிய சட்டத்தின் மூலம் இந்த முக்கியமான மாற்றங்களைச் செயல்படுத்தும் விளிம்பில் இப்போது இருக்கிறோம். இலங்கை கிரிக்கெட்டுக்கு இது ஒரு தீர்க்கமான தருணம். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு இலங்கை கிரிக்கெட்டுக்கான புதிய விளையாட்டுச் சட்டம் மற்றும் அரசியலமைப்புடன் சீர்திருத்தங்களை நிறைவேற்ற வேண்டும்.

இலங்கையில் கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டோ வியாபாரமோ அல்ல; இது நமது தேசிய உணர்வின் பிரதிபலிப்பாகும். நமது வெற்றியை நிதி அளவீடுகளால் அளக்காமல், களத்தில் நாம் அடையும் வெற்றிகள் மற்றும் நம் மக்களிடம் உள்ள நம்பிக்கையை வைத்து அளவிட வேண்டும். தற்போது, எங்களின் செயல்திறன் ஏற்கத்தக்கதாக இல்லை, மாற்றத்திற்கான நேரம் இப்போது வந்துவிட்டது எனக் கூறியுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *