பாகிஸ்தானை புரட்டிப் போடும் வரலாறு காணாத மழை : பலி எண்ணிக்கை 1,208 ஆக உயர்வு

பாகிஸ்தானை புரட்டிப் போடும் வரலாறு காணாத மழை : பலி எண்ணிக்கை 1,208 ஆக உயர்வு

(UTV |  கராச்சி) – பாகிஸ்தானில் வரலாறு காணாத மழை கொட்டி வருகிறது. கடந்த ஜுலை மாதம் தொடங்கிய பருவமழை இன்னும் அங்கு ஓய்ந்தபாடில்லை.

இடைவிடாமல் மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி போய் உள்ளது தொடர் மழையால் பாகிஸ்தானில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பி ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல நகரங்களில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்து உள்ளது.

பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது. 10 லட்சத்து 57 ஆயிரம் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி கிடப்பதால் 3 கோடிக்கும் அதிகமான மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். அவர்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். ஏராளமான மக்கள் தங்குமிடம், உணவு, குடிநீர் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

பாகிஸ்தானை புரட்டி போட்டுள்ள இந்த பேய் மழைக்கு பலியானவர்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதுவரை மழைக்கு இறந்தவர்கள் எண்ணிக்கை 1,208 ஆக உயர்ந்து இருக்கிறது. இதில் குழந்தைகளும் அடங்குவர். 4,896 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 7 லட்சத்து 33 ஆயிரத்து 488 கால்நடைகள் பலியாகி உள்ளது. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர். பலரை காணவில்லை. அவர்கள் கதி என்னவென்று தெரியவில்லை. மாயமானவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.

சுமார் 2 லட்சம் வீடுகள் முற்றிலும் இடிந்து சேதமாகி விட்டது. 5,063 கிலோ மீட்டர்தூரம் சாலைகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு உள்ளதால் வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. பாகிஸ்தானில் 3-ல் ஒரு பங்கு பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் தாங்கமுடியாத துயரத்துக்கு தள்ளப்பட்டு உள்ளனர். மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டாலும் வெள்ளம் காரணமாக பல இடங்களுக்கு அவர்களால் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தானுக்கு சவுதி அரேபியா, சீனா, கத்தார், துருக்கி, உஸ்பெகிஸ்தான் உள்பட பல நாடுகள் உதவி வருகிறது. அமெரிக்கா 30 மில்லியன் டாலர் நிதி உதவி அளிக்கப்போவதாக அறிவித்து உள்ளது. பொருளாதாரத்தை மீட்டெடுக்க நட்பு நாடுகள் முன்வர வேண்டும் என பாகிஸ்தான் வேண்டுகோள் விடுத்துள்ளது.

COMMENTS

Wordpress (0)
Disqus ( )