இடைக்கால தடை உத்தரவை நீக்குவதற்கு மறுப்புத் தெரிவித்தது உச்ச நீதிமன்றம்

(UTV|COLOMBO)-மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் பதவி மற்றும் அமைச்சரவை செயற்படுவதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவுக்கு எதிராக தடையுத்தரவு விதிக்க உச்ச நீதிமன்றம் ஒரு மனதாக மறுப்புத் தெரிவித்துள்ளது.

மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் பதவி மற்றும் அமைச்சரவை செயற்படுவதற்கு எதிராக கடந்த 03ம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தது.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து தாக்கல் செய்த மனுவை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

இதனையடுத்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவை நீக்குமாறு கோரிக்கை விடுத்து மஹிந்த ராஜபக்ஷவால் உச்ச நீதிமன்றத்தில் விஷேட மேன்முறையீட்டு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இதன் பிரதிவாதிகளாக ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் உள்ளிட்ட 122 உறுப்பினர்களின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி குறித்த மனு 12 ஆம் திகதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதுடன், வழக்கை இன்று 14 ஆம் திகதி வரையில் ஒத்தி வைக்க உத்தரவிடப்பட்டது.

அதனடிப்படையில் குறித்த மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் ஈவா வனசுந்தர, புவனேக அலுவிஹரே மற்றும் விஜித் மலல்கொட ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

குறித்த மனுவை பெரும்பான்மை நீதிபதிகளின் தீர்மானத்தின் படி விசாரிப்பதற்கு அனுமதி வழங்கிய நீதிமன்றம், அதனை எதிர்வரும் ஜனவரி 16, 17 மற்றும் 18ம் திகதிகளில் விசாரிக்க உத்தரவிட்டது.

அத்துடன் உச்ச நீதிமன்றத்தில் இடம்பெறுகின்ற மேன்முறையீட்டு வழக்கு நிறைவடையும் வரை, இது சம்பந்தமாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இடம்பெறுகின்ற வழக்கை இடைநிறுத்துவதற்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எவ்வாறாயினும் மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் பதவி மற்றும் அமைச்சரவை செயற்படுவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவை நீக்குவதற்கு உத்தரவிடுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *