மகாவலி வலயங்களில் உப உணவு பயிர்ச் செய்கையை மேம்படுத்த பணிப்பு

(UTV|COLOMBO)-எதிர்வரும் சிறுபோகத்தின் போது மகாவலி வலயங்களில் நெற் பயிர்ச் செய்கையுடன் இணைந்ததாக உப உணவு பயிர்ச் செய்கையை மேம்படுத்துவதற்கான விரிவான செயற்திட்டம் ஒன்றையும் நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மகாவலி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

மகாவலி வலயத்தில் மிளகாய் உள்ளிட்ட உப உணவுப் பயிர்கள் செழிப்பாக பயிரிடப்பட்டு வந்தபோதிலும் தற்போது அவை அழிவடைந்துள்ளதுடன் அதிக செலவில் அவ்வுற்பத்திகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய நேர்ந்துள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இதனால் தேசிய உணவு உற்பத்திக்கு பாரிய பங்களிப்பினை வழங்கக்கூடிய வகையில் மகாவலி வலயங்களில் உப உணவுப் பயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்கான புதிய விவசாய செயற்திட்டம் ஒன்றினை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இலங்கை மகாவலி அதிகார சபையின் உள்ளக பதவி உயர்வுகளுக்குரிய நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு நேற்று (18) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.

உள்நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய பயிர் வகைகளை இயன்றளவு பயிர்ச்செய்வதன் ஊடாக இறக்குமதிகளை மட்டுப்படுத்துவதுடன் அதனால் ஏற்படக்கூடிய அதிக செலவினை விவசாயத் தொழிற்துறையை மேம்படுத்துவதற்கு உபயோகிக்கும் அதேவேளை, நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்கான பின்னணியாகவும் அது அமையுமென ஜனாதிபதி குறிப்பிட்டார்.

பல வருடங்களாக நிலவிவந்த வரட்சி நிலை நீங்கி கிடைக்கப்பெற்றுள்ள மழைக் காலத்தினை சாதகமாகக் கொண்டு நாடு பூராகவும் விரிவான விவசாய செயற்திட்டங்களை புத்துணர்ச்சியுடனும் உயிர்ப்புடனும் நடைமுறைப்படுத்த வேண்டுமென ஜனாதிபதி இதன்போது அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

அத்துடன் மகாவலி குடியேற்றவாசிகளுக்கு காணி உறுதிகளை வழங்கும் செயற்திட்டத்தினை துரிதமாக நிறைவு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் புதிய விளைநிலங்களைப் பெற்றுக்கொண்ட மகாவலி குடியேற்றவாசிகள் மத்தியில் நிலையான காணி உறுதிகள் ஒரு சிலருக்கு வழங்கப்பட்டிருந்தது. இதனால் மகாவலி குடியேற்றவாசிகள் நீண்டகாலமாக எதிர்நோக்கிய பிரச்சினைக்கு தீர்வாக சகல மகாவலி குடியேற்றவாசிகளுக்கும் நிலையான காணி உறுதிகளை வழங்கும் செயற்திட்டம் 2016 ஆம் ஆண்டு ஜனாதிபதியின் வழிகாட்டலில் ஆரம்பிக்கப்பட்டது.

மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அநுர திசாநாயக்க, மகாவலி பணிப்பாளர் நாயகம் கலாநிதி டி.எம்.எஸ். திசாநாயக்க உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *