தனியார் மருத்துவ மனைகளின் கட்டணங்களை குறைக்க நடவடிக்கை

(UTV|COLOMBO)-தனியார் மருத்துவ மனைகளின் கட்டணங்களை ஒழுங்குறுத்தும் உத்தேச திருத்த சட்டத்தின் வரைவுக்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக சுகாதார, போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.

அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் உரையாற்றினார்.

ஒழுங்குறுத்தும் உத்தேச திருத்த சட்டம் சட்ட வரைஞர் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வர்த்தமானி அறிவித்தலில் வெளியிட எதிர்பார்த்திருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

நான் சுகாதார அமைச்சராகப் பதவியேற்ற பின்னர் இருதய சிகிச்சைக்காக பொருத்தப்படும் ‘ஸ்டென்ட்’ ஒன்றின் விலையை மூன்றரை இலட்சத்திலிருந்து ஒன்றரை இலட்சமாகக் குறைத்துள்ளேன். இதுபோன்று பல்வேறு மருந்துகளின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அரசாங்க மருத்துவசாலைகளில் அவசர சிகிச்சைப் பிரிவுகள், இருதய சிகிச்சைப் பிரிவுகள் என்பவற்றை அதிகரித்துள்ளோம். சிறுவர் மற்றும் மகப்பேற்று வைத்தியசாலைகள், புற்றுநோய் வைத்தியசாலைகள் என்பனவும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான நிலையில் தனியார் வைத்தியசாலைகளில் அதிகளவு பணம் அறவிடப்படுவதாக தொடர்ந்தும் முறைப்பாடுகள் கிடைக்கின்றன.இவற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் புதிய திருத்த சட்டமூலமொன்றைக் கொண்டுவர நடவடிக்கை மேற்கொண்டோம். எனினும், 51 நாள் அரசியல் குழப்பத்தினால் எல்லாம் தடைப்பட்டன. தற்பொழுது இதற்கான இறுதி வரைபு தயாரிக்கப்பட்டுள்ளது சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *