ஜனாதிபதி – சிங்கப்பூர் பிரதமருக்கிடையில் சந்திப்பு

(UTV|COLOMBO)-சிங்கப்பூருக்கான இரண்டுநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேனவுக்கும் சிங்கப்பூர் பிரதமர் Mr Lee Hsien Loong அவர்களுக்குமிடையிலான சந்திப்பு நேற்று (25) நண்பகல் இடம்பெற்றது.

இருநாடுகளுக்கிடையிலான வர்த்தக, சுற்றுலா மற்றும் தொழிற்துறை உறவுகளை மேலும் மேம்படுத்துவது தொடர்பில் இருநாட்டு தலைவர்களும் கலந்துரையாடினர்.

இலங்கை மற்றும் சிங்கப்பூருக்கிடையே கைச்சாத்திடப்பட்டிருக்கும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி  அந்த ஒப்பந்தத்தை தயாரிக்கும்போது இலங்கை தரப்பில் ஒரு சில குறைபாடுகள் இடம்பெற்றுள்ளதாகவும் அந்த குறைபாடுகளை சரி செய்யும் முகமாக ஒரு சில திருத்தங்கள் மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஆசிய வலயத்திற்கு மாத்திரமன்றி உலகத்திற்கே அச்சுறுத்தலாக மாறியுள்ள போதைப்பொருள் சவாலை வெற்றிகொள்வதற்கு ஒன்றிணைந்து செயற்படுவதன் முக்கியத்துவம் தொடர்பில் இருநாட்டு தலைவர்களும் கவனம் செலுத்தியதுடன், போதைப்பொருள் அச்சுறுத்தலை கட்டுப்படுத்துவதற்காக ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேனயின் தலைமையின் கீழ் இலங்கை அரசாங்கம் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக சிங்கப்பூர் பிரதமர் தெரிவித்தார்.

சிங்கப்பூரில் பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் இலங்கையர்களுக்காகவும் அந்நாட்டில் உயர்கல்வி கற்கும் இலங்கை மாணவர்களின் நலன்புரி தேவைகளுக்காகவும் சிங்கப்பூர் அரசாங்கம் வழங்கும் ஒத்துழைப்புக்காக ஜனாதிபதி சிங்கப்பூர் பிரதமருக்கு நன்றி தெரிவித்தார்.

இதேநேரம் அஸ்டோனியாவின் சுற்றாடல் அமைச்சரும் ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றாடல் குழுவின் நான்காவது கூட்டத்தொடரின் தலைவருமான Slim kiisler ஜனாதிபதியை  சந்தித்து கலந்துரையாடினார்.

சுற்றாடலை பாதுகாப்பதுடன், பேண்தகு அபிவிருத்தி இலக்குகளை வெற்றிகொள்வதற்கு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் வழிகாட்டலின் கீழ் இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் அந்நாட்டு பிரதமரின் பாராட்டினை பெற்றது.

சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பில் முழு உலகுக்கும் முன்னுதாரணமாக விளங்கும் வகையில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள இலங்கை அரசாங்கத்தின் கௌரவ ஜனாதிபதி அவர்கள் சுற்றாடல் சவால்களை வெற்றிகொள்வது தொடர்பில் இன்று இடம்பெற்ற மாநாட்டில் தெரிவித்த கருத்துக்களுக்கு நன்றி தெரிவித்த அமைச்சர், ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன  முன்வைத்த கருத்துக்கள் சர்வதேச ரீதியாக மிக முக்கியத்துவம் வாய்ந்தவை என்றும் தெரிவித்தார்.

எதிர்வரும் மார்ச் மாதம் நைரோபியில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றாடல் கூட்டத்தொடரில் சிறப்பு அதிதியாக கலந்துகொள்ளுமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

காலநிலை மாற்றங்கள் காரணமாக ஏற்படும் சவால்களை வெற்றிகொள்வதற்கும் சுற்றாடல் பாதுகாப்பு வேலைத்திட்டங்களுக்கும் ஐக்கிய நாடுகள் சபை இலங்கைக்கு வழங்கும் ஒத்துழைப்பை பாராட்டிய ஜனாதிபதி  பொலித்தீன் பாவனைக்கு தடை விதிப்பதுபோல் கடுமையான சட்டதிட்டங்களை அமுல்படுத்துவதன் ஊடாக சுற்றாடலை பாதுகாப்பதற்கு இலங்கை அரசாங்கம் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் சுற்றாடலை பாதுகாப்பதற்கு முப்படையினரின் பங்களிப்பினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் அமைச்சருக்கு விளக்கினார்.

அஸ்டோனியா மற்றும் இலங்கைக்கிடையிலான இருநாட்டு தொடர்புகளை புதிய துறைகளின் ஊடாக மேம்படுத்துவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *