நெய் எனக்கூறி மிருகக்கொழுப்பை விற்றுவந்த வர்த்தகர் மடக்கி பிடிப்பு : அபராதம் விதிக்கப்பட்டதோடு போலி நெய்யை அழிக்குமாறும் நீதவான் உத்தரவு!

(UTV|COLOMBO) நெய் என்று கூறி வெளி நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மிருக கொழுப்பை நீண்ட காலமாக விற்பனை செய்து வந்த வர்த்தகர் ஒருவர் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகளினால்  மடக்கி பிடிக்கப்பட்டு வத்தளை  நீதி மன்றத்தினால் இன்று (08) அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வத்தளையை சேர்ந்த இந்த வர்த்தகருக்கு எதிராக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை, வத்தளை நீதிமன்றத்தில் தொடுத்திருந்த வழக்கில் அதிகார சபை சட்டத்திற்கு அமைவாக 10 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டதோடு அவர் களஞ்சியப்படுத்தி வைத்திருந்த போலி நெய்யை  அழிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

நுகர்வோர் அதிகார சபைக்கு கிடைக்கப் பெற்ற நம்பகரமான தகவலின் அடிப்படையில் அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம்  எம்.எஸ்.எம்.பௌசரின் பணிப்புரைக்கமைய, இந்த தேடுதல் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டனர்.அதிகார சபை அதிகாரிகள்  சுற்றிவளைத்து  இந்த வர்த்தகரை மடக்கிப்பிடித்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவில் இருந்து பத்து வருடங்களுக்கு மேலாக இறக்குமதி செய்யப்படும்  99 சதவீதம்  உண்ணக்கூடியதென குறிப்பிடப்படும்  இந்த மிருக கொழுப்பு புறக்கோட்டை வர்த்தக நிலையங்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த மிருக கொழுப்பை கொள்வனவு செய்தே  இந்த குறிப்பிட்ட வத்தளையை சேர்ந்த வர்த்தகர் 4.5 லீட்டர் கொள்ளளவு உள்ள கொள்கலனில் அதனை அடைத்து  நெய் என குறிப்பிட்டு போலியாக  விற்பனை செய்து வந்தமை விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

அவுஸ்திரேயாவிலிருந்து மிருக கொழுப்பை இறக்குமதி செய்யும் பிரபலமான நிறுவனம், கொழும்பு புறக்கோட்டை வியாபாரிகளுக்கு இதனை விற்பனை செய்து வந்துள்ளது. இந்த வியாபாரிகளிடமிருந்தே வத்தளை வர்த்தகர் இதனை கொள்வனவு செய்து பாம் எண்ணெய் யுடன் கலந்து நெய் என விற்பனை செய்து வந்தமை விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.

அவுஸ்திரேலியாவில் இருந்து 18 லீட்டர் கொள்ளளவான கலனில் இறக்குமதி செய்யப்பட்ட இந்த மிருக கொழுப்பு உள்நாட்டில் 4 1/2 லீட்டர் கொள்கலனில் அடைக்கப்பட்டே இந்த மோசடி வர்த்தகம் இதுவரைகாலமும் நடத்தப்பட்டு வந்திருக்கின்றது

இந்த போலி நெய்யானது  பிரியாணி, பிரைட் றையில் மற்றும் பல உணவுப்பொருட்கள் சமைப்பதற்கான உள்ளடக்க சேர்மானமாக  பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அது மாத்திரமன்றி மத தலங்களின் முன்பாக நெய் எனவும்  விற்பனை செய்யப்பட்டு வந்தமை விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

நுகர்வோர் பாதுகாப்பு சபை அதிகாரிகள் புறக்கோட்டை நெய் உற்பத்தி செய்யும் மற்றும் விற்பனை செய்யும் பல்வேறு  நிலையங்களில் மேற்கொண்டு சோதனைகளில் ஈடு பட்டு, அவர்களிடமிருந்து பெறப்பட்ட மேலும் ஏழு மாதிரிகளை ஆய்வுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதேவேளை  சில வாரங்களுக்கு முன்னர் மிருக உணவுக்கென கொள்வனவு செய்யப்பட்ட  மனித பாவனைக்கு உதவாத 15 மெற்றிக் தொன் பால்மாவினை  வரக்காப்பொல பிரதேசத்தை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் பக்கெட்டுகளில் அடைத்து மனித பாவனைக்கென விற்பனை செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்த போது நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகளால்  கைது செய்யப்பட்டனர்.

குறிப்பிட்ட வர்த்தகருக்கு எதிராக துல்கிரிய  நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட போது, நீதி மன்றம் 10 ஆயிரம் அபராத தொகையை விதிக்கப்பட்டதோடு குற்றவாளிக்கு  10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஆறு மாத கடூழிய சிறை தண்டனையும்  விதித்து தீர்ப்பளித்துள்ளது. அத்துடன் குறிப்பிட்ட தொகையான மிருக உபயோகத்திற்கான பால்மா,  நீதவானின் முன்னிலையில் வரக்கப்பொல  பிரதேச சபையின் பூரண ஒத்துழைப்புடன் முற்றாக அழிக்கப்பட்டது.

மேலும் மிருக பாவனைக்கென  கொள்வனவு செய்யப்பட்டு முழு ஆடை பால்மா என பக்கட்டுக்களில் அடைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் குளியாப்பிட்டிய பிரதேசத்தில் நுகர்வோர் அதிகார சபையினால் உற்பத்தி நிலையம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்ட போது 160 மெற்றிக் தொன் மா அகப்பட்டது. இந்த வர்த்தகருக்கு எதிராக குளியாப்பிட்டிய மஜிஸ்திரேட் நீதி மன்றத்தில் வழக்கு  தொடரப்பட்டதுடன்  நீதிமன்றத்தினால் குறிப்பிட்ட தொகையான மா முத்திரை இடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

 

 

-ஊடகப்பிரிவு-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *