நாட்டுக்காக ஒன்றிணைந்து பொருளாதார பிரச்சினைகளில் இருந்து நாட்டை மீட்க செயற்படுவது அனைவரினதும் பொறுப்பு

(UTV|COLOMBO) நாட்டைப்பற்றி சிந்தித்து நாட்டுக்காக ஒன்றிணைந்து பொருளாதார பிரச்சினைகளில் இருந்து நாட்டை மீட்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவது அனைவரினதும் பொறுப்பாகும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

இன்று (22) முற்பகல் புத்தளம் சக்தி விளையாட்டரங்கில் இடம்பெற்ற “நாட்டுக்காக ஒன்றிணைவோம்” புத்தளம் மாவட்ட நிகழ்ச்சித்திட்டத்தின் இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கௌரவ ஜனாதிபதி அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் பேரில் ஜனாதிபதி செயலகத்தினால் முன்னெடுக்கப்படும் தேசிய அபிவிருத்தி செயற்திட்டங்களாகிய போதைப்பொருள் ஒழிப்பு தேசிய செயற்திட்டம், சிறுவர்களை பாதுகாப்போம் தேசிய செயற்திட்டம், சுற்றாடல் பாதுகாப்பு தேசிய செயற்திட்டம் உள்ளி்ட்ட விசேட செயற்திட்டங்கள் மற்றும் வெவ்வேறு அமைச்சுக்களினால் முன்னெடுக்கப்படும் தேசிய அபிவிருத்தி செயற்திட்டங்களையும் சமூக நலன்புரி வேலைத்திட்டங்களையும் வினைத்திறனாகவும் பயனுறுதி வாய்ந்த முறையிலும் நடைமுறைப்படுத்தி கிராமிய மட்டம் முதல் மாவட்ட மட்டம் வரையில் மக்களுக்கு அதிகளவிலான சேவையையும் நன்மைகளையும் பெற்றுக்கொடுப்பதே “நாட்டுக்காக ஒன்றிணைவோம்” செயற்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.

அதன் முதலாவது மாவட்ட மட்ட செயற்திட்டம் கடந்த 18ஆம் திகதி புத்தளம் மாவட்டத்தில் ஆரம்பமானதுடன், புத்தளம் மாவட்டத்தின் 16 பிரதேச செயலக பிரிவுகள் மற்றும் 332 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உள்ளடங்கும் வகையில் அப்பிரதேச மக்களின் கல்விப் பிரச்சினைகள், சுகாதார பிரச்சினைகள், தொழில் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொடுத்தல் உள்ளிட்ட மக்களுக்கான பல்வேறு சேவைகள் அங்கு வழங்கப்பட்டன.

புத்தளம் மாவட்டத்தின் அபிவிருத்தியை வினைத்திறனாக முன்னெடுப்பதற்கு விசேட திட்டம் ஒன்று விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். இதற்கான திட்டமொன்றை தயாரித்து விரைவில் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

சமூக, பொருளாதார ரீதியாக புத்தளம் மாவட்டத்தில் உள்ள மக்கள் முகங்கொடுத்திருக்கின்ற பிரச்சினைகளுக்கும் அபிவிருத்தியில் பின்னடைந்திருக்கும் மாவட்டத்தின் அபிவிருத்திக்கும் இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் விரிவான நன்மைகள் கிடைக்கும் என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

“நாட்டுக்காக ஒன்றிணைவோம்” நிகழ்ச்சித்திட்டம் ஒரு அரசியல் நிகழ்ச்சித்திட்டமல்ல எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், அது அரசியல், இனம், மதம் என்ற வேறுபாடுகளை மறந்து நாட்டின் பிரச்சினையை தீர்ப்பதற்கு அனைவரும் ஒன்றிணையும் ஒரு நிகழ்ச்சித்திட்டமாகும் என்றும் குறிப்பிட்டார்.

நீண்டகாலமாக மக்கள் முகங்கொடுத்து வந்த பிரச்சினைகளுக்கு துரித தீர்வுகளை வழங்கி, மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் “நாட்டுக்காக ஒன்றிணைவோம்” செயற்திட்டம் எதிர்காலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இடம்பெறவுள்ளன.

இன்று இடம்பெற்ற புத்தளம் மாவட்ட இறுதி நிகழ்வில் தேசிய உணவு உற்பத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் புத்தளம் மாவட்டத்தில் உள்ள பயனாளிகளுக்காக சூரிய சக்தி திட்டங்களை வழங்குதல், விதைகள், மரக்கன்றுகளை வழங்குதல், விவசாய உபகரணங்களை வழங்குதல் மற்றும் சிறுநீரக நோய் ஒழிப்பு தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் விவசாய ஓய்வூதியம் வழங்குதல், நீர் சுத்திகரிப்பு தொகுதிகளை வழங்குதல், காணி உறுதிகளை வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சித்திட்டங்களும் சமூக சேவை நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் அங்கவீனமுற்றவர்களுக்கு சக்கர நாற்காலிகளை வழங்குதல், சுய தொழில் உபகரணங்கள் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சித்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன.

அமைச்சர் கயந்த கருணாதிலக்க, வட மேல் மாகாண ஆளுநர் பேசல ஜயரத்ன, பாலித்த ரங்கே பண்டார, ஹெக்டர் அப்புகாமி, விக்டர் அந்தோனி உள்ளிட்ட மாகாணத்தின் மக்கள் பிரதிநிதிகளும் ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன, புத்தளம் மாவட்ட செயலாளர் என்.எச்.எம். சித்ராநந்த உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகளும் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இதன்போது புத்தளம் மாவட்ட “ஸ்மார்ட் ஸ்ரீ லங்கா” தொழில் வழிகாட்டும் நிலையம் இன்று (22) ஜனாதிபதி அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து தொழில் வழிகாட்டல் நிலையத்தை திறந்து வைத்த ஜனாதிபதி அவர்கள், அதனை பார்வையிட்டார்.

“ஸ்மார்ட் ஸ்ரீ லங்கா” பணிப்பாளர் நாயகம் எரிக் பிரசன்ன வீரவர்தன உள்ளிட்ட அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மேலும் புத்தளம் நகர கேட்போர் கூடமும் ஜனாதிபதி அவர்களினால் இன்று முற்பகல் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது.

தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள் அமைச்சினதும் உள்நாட்டலுவல்கள் அமைச்சினதும் ஏற்பாடுகளின் கீழ் அனைத்து வசதிகளையும் கொண்டதாக இந்த கேட்போர் கூடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

நினைவு பலகையை திரைநீக்கம் செய்து கேட்போர் கூடத்தை திறந்து வைத்த ஜனாதிபதி அவர்கள் அதனை பார்வையிட்டார்.

புத்தளம் நகர பிதா கே.ஏ.பாயிஸ் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *