கல்முனையில், ஏட்டிக்கு போட்டியான அறவழி போராட்டத்தை கைவிட்டு பேச்சு மூலம் தீர்வு காணுங்கள் – பாராளுமன்றில் ரிஷாத் கோரிக்கை

(UTV|COLOMBO)- கல்முனையிலேயே ஏட்டிக்குப்போட்டியாக உண்ணாவிரதத்திலும், சத்தியாக்கிரகத்திலும் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் தமிழ், முஸ்லிம் சமூகங்களும் உடனடியாக போராட்டத்தை கைவிட்டு பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வுகாண முன்வருமாறு முன்னாள் அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாத் பதியுதீன் அழைப்பு விடுத்துள்ளார்.

பாராளுமன்றில் நேற்று(21) மாலை உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது ;

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயாவும், முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமும் ஒன்றாக அமர்ந்து பேசித் தீர்க்க வேண்டிய விடயத்தை அல்லது முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரனும் இணைந்து பேசித் தீர்க்க வேண்டிய விடயத்தை. வேறு எவரினதோ கையில் இப்போது கொடுத்துள்ளனர்.

அவசர காலச் சட்டத்தை பயன்படுத்தி மதகுரு ஒருவர் கல்முனையில் உண்ணாவிரதம் இருக்கின்றார். இன்னுமொரு மத குரு இதனை தீர்த்து வைப்பதாகக் கூறி கல்முனைக்கு செல்கின்றார்.

100 அடிக்கு இடைவெளிக்குள் இவ்விரண்டு சமூகங்களும் இருந்து தமது நியாயங்களை எடுத்துரைக்கும் நிலையை பார்க்கும் போது, எனக்கு மிகவும் வேதனையாக இருக்கின்றது.

இரண்டு தரப்பும் போராட்டங்களை கைவிட்டு தத்தமது சமூகங்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய வகையிலான சுமூகமான பேச்சுவார்த்தை ஒன்றின் மூலம் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வைக்கான ஒன்றுபடுமாறு நான் வேண்டுகோள் விடுக்கின்றேன். மற்றுமொருவருக்கு இந்த பிரச்சினையை கொடுத்து நீங்கள் தீர்வுகாண விழையும் விதமானது இந்த நாட்டிலேயே சிறுபான்மையினருக்கு எதிர்காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதையும் அது ஒரு பிழையான முன்மாதிரி என்பதையும் நீங்கள் மறந்து விட வேண்டாம்.

ஊடகப்பிரிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *