பிரஜைகளின் கௌரவத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான பணிகளை முன்னெடுப்பேன்

(UTV|COLOMBO)  நேற்று (26) நண்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இஸ்லாமிய நாடுகள் ஒன்றியத்தில் அங்கத்துவம் பெற்றுள்ள இஸ்லாமிய நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுடனான சந்திப்பின்போது தேர்தல்களை இலக்காகக்கொண்டு நாட்டில் இனங்களுக்கிடையே அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் அரசியல்வாதிகள் வெளியிடும் இனவாத கருத்துக்களை வெளியிட்டாலும் அரச தலைவர் என்ற வகையில் அனைத்து பிரஜைகளினதும் மரியாதையையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தாக்குதலைத் தொடர்ந்து மேற் குறிப்பிட்ட நாடுகள் இலங்கைக்கு வழங்கிய ஒத்துழைப்பிற்காக தூதுவர்களுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி, இனிவரும் காலங்களிலும் இலங்கைக்கு பொருளாதார உதவிகளை வழங்குமாறும், சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தருவதற்கு விடுத்துள்ள தடைகளை நீக்குமாறும் வேண்டுகோள் விடுத்தார்.

பயங்கரவாத தாக்குதலின் பின்னர் பாதுகாப்புத் துறையினரால் மேற்கொள்ளப்பட்ட வெற்றிகரமான செயற்பாடுகள் தொடர்பில் தெளிட்வூட்டிய ஜனாதிபதி, அப்பணிகளுக்கு அனைவரும் வழங்கிய ஒத்துழைப்பிற்காக நன்றியை தெரிவித்தார். எத்தகைய சூழலிலும் பயங்கரவாதத்தை வன்மையாக கண்டிப்பதாக வருகை தந்திருந்த தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் தெரிவித்தனர்.

துருக்கி, மலேசியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு இராச்சியம், ஆப்கானிஸ்தான், இந்தோனேசியா, சவுதி அரேபியா, பலஸ்தீன், பங்களாதேஷ், குவைட், கட்டார், மாலைதீவு, ஈராக், லிபியா, ஈரான் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்ன, வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க, ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் எசல வீரக்கோன் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *