“சஹ்ரானை வாழ்நாளில் சந்தித்ததேயில்லை – ஐஎஸ் அமைப்பை அரசு இல்லாதொழிக்க வேண்டும்” – தெரிவுக்குழு முன் ரிஷாட்

(UTV|COLOMBO) “வேற்று மதத்தினரை கொல்லவோ அல்லது தற்கொலை தாக்குதல் நடத்தவோ இஸ்லாம் கூறவில்லை. இவர்களை இஸ்லாத்தில் ஏற்க முடியாது. நான் ஐ.எஸ். அமைப்பை நிராகரிக்கிறேன். அந்த அமைப்பை ஒழிக்க அரசாங்கம் செயல்பட வேண்டும் ” என்று முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கூறினார்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழு முன் சாட்சியங்களை அளிக்கும் போது அவர் இவ்வாறு கூறினார்.

கேள்வி – ச.தொ.ச வாகனங்கள் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் உள்ளனவா?

பதில் – கடந்த அக்டோபரில் அமைக்கப்பட்ட அரசாங்கத்திற்கு என்னை அழைத்தனர்.ஆனால் ஆனால் நான் செல்லவில்லைஇதனால் என் மீது குற்றம் சாட்டினர், . மற்றொரு எம்.பியும் இதை கூறினார். இந்த கடுமையான குற்றச்சாட்டுகள் குறித்து அவர்கள் பொலிஸில் புகார் செய்யக்கூடுமென நான் எதிர்பார்த்தேன். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. அதனால் நான் பொலிஸ் சென்று அவர்கள் மீது புகார் அளித்தேன்.

கேள்வி – தாக்குதல் விசாரணையில் தலையிட்டதாக குற்றச்சாட்டுகள் உள்ளனவா? முஸ்லீம் மத விவகார அமைச்சின் ஆலோசகரின் மகன் குறித்து இராணுவத் தளபதியிடம் பேசினீர்களா?

பதில் – அவர் அரச பொது நிர்வாக சேவையின் முதற்தர அதிகாரி. ஜனாதிபதி சிறிசேன அமைச்சராக இருந்தபோது, அவர் அந்த அமைச்சில் மேலதிக செயலாளராகவும் பணியாற்றினார். 1990 ல் முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளிலிருந்து வெளியேற்றப்பட்ட போது அவர் புனர்வாழ்வு இயக்குநராக இருந்தார். இனம் தெரியாத குழு ஒன்று தனது மகனை அழைத்துச் சென்றதாகக் கூறி அவர் பொலிஸில் புகார் அளித்துள்ளார். எங்களிடம் அவர் இல்லை என்று பொலிஸார் தெரிவித்தனர். விசேட அதிரடிப்படையும் அப்படியே கூறியுள்ளது.. அவர் என் வீட்டிற்கு வந்து கண்ணீருடன் தனது மகன் எங்கே இருக்கிறார் என்று தேடித்தருமாறு சொன்னார்.

தெஹிவளை பொலிஸில் கேட்டபோதும் , தெஹிவளைக்கு பொறுப்பான டி.ஐ.ஜி விக்ரமசிங்கவிடம் கேட்ட போதும் அவர்கள் கைது செய்யவில்லையென்றும் ஆனால் இதனை தேடுவதாகவும் கூறினார்கள் .நான் இராணுவத் தளபதியை அழைத்து அவரிடம் இது பற்றி வினவி இதனை பார்க்கச் சொன்னேன். தொடர்ந்து அந்த தந்தையார் கேட்டுக்கொண்டதால் இன்னொரு முறை அழைத்தபோது, இதனை கவனிப்பதாக இராணுவத்தளபதி கூறினார்.மீண்டும் 28 ஆம் தேதி மீண்டும் அழைத்தபோது கைதை உறுதி செய்த அவர் கைதானவரை பொலிஸில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படுமென கூறினார். அதன் பிறகு நான் அழைப்பை ஏற்படுத்தவில்லை. என்ன நடந்தது என்பதை அறிய மட்டுமே நான் விரும்பினேன்.மகன் இன்னும் உயிருடன் இருக்கிறாரா என்று பார்க்க தந்தை விரும்பினார். அவர் இராணுவக் காவலில் இருப்பதை அறிந்ததும், நான் திரும்ப அழைக்கவில்லை.

கேள்வி – தொழிலதிபர் இப்ராஹிமிடம் பொருட்களை வாங்க அழுத்தங்களை வழங்கினீர்களா?

பதில் – நீங்கள் அதைப் பற்றி அமைச்சின் செயலாளரிடம் கேட்கலாம். நான் அழுத்தங்களை வழங்கியதில்லை .

கேள்வி – துருக்கி தீவிரவாதிகள் பற்றிய தகவல்களை அனுப்பியுள்ளது உங்களுக்குத் தெரியுமா?

பதில் – எனக்குத் தெரியாது

கேள்வி – நீங்கள் காத்தான்குடியில் அரசியல் செய்கிறீர்களா?

பதில் – பெரிய அரசியல் என்று எதுவும் இல்லை. எங்களிடமிருந்து ஒரு பிரதேச சபை உறுப்பினர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கேள்வி – இந்த பயங்கரவாத செயல்கள் சம்பவத்திற்கு முன்னர் உங்களுக்குத் தெரியுமா?

பதில் – உங்கள் மதம் உங்களுக்கானது. எனது மதம் எனக்கானது என குர்ஆனில் சொல்லப்பப்படுகிறது.சிலருக்கு பிரச்சினை இருக்கலாம் . நான் ஒரு அரசியல்வாதி. நான் மத பிரச்சினைகளில் ஈடுபடவில்லை. ஸஹ்ரான் ஒரு மௌலவி அல்ல.. அவர் ஒரு மதத் தலைவர் அல்ல. அவர் மட்டுமே தன்னை மௌலவி என்று அழைத்தார்.இந்த சம்பவத்திற்கு முன்னர் பயங்கரவாத குழுவின் செயற்பாடுகள் பற்றி எனக்கு தெரியாது

கேள்வி – ஹிஸ்புல்லா உங்கள் கட்சியில் இருந்தார் அல்லவா ?

பதில் – ஏ. ஹிஸ்புல்லாஹ் எங்கள் கட்சியில் சுமார் 5 ஆண்டுகளாக இருந்தார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்ரிபால சிறிசேனவை நாங்கள் ஆதரித்தபோது, அவர் மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்கச் சென்றார்.

கேள்வி – 2015 இல் வாக்களித்தவர்கள் சஹ்ரானுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளனர் என்பது உங்களுக்குத் தெரியுமா?

பதில் – இந்த குழுவில் சொல்வதை நான் பார்த்தேன். பின்னர் நான் எங்கள் அமீர் அலியிடம் கேட்டேன். அத்தகைய ஒப்பந்தம் எதுவும் கையெழுத்திடப்படவில்லை என்றார்.

கேள்வி – நீங்கள் சஹ்ரானை சந்திக்கவில்லை என்று சொன்னீர்கள்.அனால் நீங்கள் சந்தித்த படங்கள் வெளியாகினவே ?

பதில் – இது அக்டோபர் 15, 2015 அன்று அரபுக் கல்லூரியில் நடந்த விழாவில் எடுக்கப்பட்ட படம். இது ஸஹ்ரான் அல்ல .அது மௌலவி நிஸ்தார். தன்னை ஸஹ்ரான் என்று தொலைக்காட்சியில் காட்டியதாக அவர் என்னிடம் கடிதம் மூலம் தெரிவித்தார்.. அவர் நிட்டம்புவ பொலிஸ் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்துள்ளார். அவர் கொழும்பு பொலிஸ் தலைமையகத்திற்குச் சென்று புகார் அளித்துள்ளார். இவை தவறான குற்றச்சாட்டுகள்.சஹ்ரானை வாழ்நாளில் கண்டதில்லை. தாக்குதலின் பின்னரே சஹ்ரானின் படத்தை கண்டேன்

கேள்வி – வில்பத்துவில் உங்களுக்கு பல ஏக்கர் நிலம் இருப்பதாக குற்றச்சாட்டுகள் இருந்தனவா?

பதில் – 2015 க்குப் பிறகு, வடக்கு மாகாணத்திற்கு எந்த நிலமும் வழங்கப்படவில்லை. 2009 ல் போருக்குப் பிறகு ஒரு பணிக்குழு நிறுவப்பட்டது. இராணுவத் தளபதி, பொலிஸ் மா அதிபர், வன பாதுகாப்பு பணிப்பாளர் நாயகம் மற்றும் அரச அதிபர் ஆகியோர் அதில் இருந்தனர். எங்கு மீள்குடியேற்றம் செய்ய வேண்டும் என்று அந்த குழுவே முடிவு செய்தது. முந்தைய அரசாங்கம் அதைச் செய்தது. முந்தைய அரசாங்கம் செய்தது தவறு என்று நான் கூறவில்லை. வில்பத்து தேசிய பூங்காவிற்குள் ஒரு குடும்பத்திற்கு கூட நிலம் வழங்கப்படவில்லை. மன்னாரில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டது. இந்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஜனாதிபதி ஒரு குழுவை நியமித்தார். வில்பத்து தேசிய பூங்காவுக்குள் மீள்குடியேற்றம் நடக்கவில்லை என்று அதன் அறிக்கை கூறுகிறது. வில்பத்து புத்தளம் மற்றும் அனுராதபுர மாவட்டங்களில் உள்ளது. இந்த அரசாங்கம் வந்தபோது, எந்த நிலமும் வழங்கப்படவில்லை. இது 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் வழங்கப்பட்டது.

அரபு மொழிகளில் பெயர் பலகைகளை காட்சிப்படுத்துவதை நானும் எதிர்க்கிறேன்.என் மீது தவறான செய்திகளை வெளியிடும் ஊடக நிறுவனங்களின் தலைவர்களிடம் விசாரணையை நடத்துமாறு தெரிவுக்குழுவிடம் கேட்கிறேன். .55 ஏக்கர் நிலப்பரப்பு மாத்திரமே எனக்கு உள்ளது. 8000 ஏக்கர் நிலப்பரப்பு கிடையாது. அவ்வாறு காணி இருக்குமாயின், 55 ஏக்கரை தவிர ஏனைய காணிகளை அரசுடமையாக்க நடவடிக்கை எடுக்கவும் – என்றார் ரிஷார்ட்

ரிஷார்ட்டின் சாட்சியத்தையடுத்து விசேட அறிவிப்பொன்றை விடுத்த தெரிவுக்குழுவின் உறுப்பினரும் பிரதி சபாநாயகருமான ஆனந்த குமாரசிறி ,பதில் பொலிஸ் மா அதிபர் நியமித்த விசேட பொலிஸ் குழு – தீவிரவாத தாக்குதல் சம்பவங்களுடன் ரிஷார்ட்டுக்கு தொடர்பில்லையென்று தெரிவுக்குழுவுக்கு அறிவித்திருப்பதாக கூறியதுடன் அந்தக் கடிதத்தையும் வாசித்துக் காட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *