ரஜினி காட்சி குறித்து வருத்தம் தெரிவித்த கமல்! (video)

 

(UTVNEWS | COLOMBO) – தயாரிப்பாளருக்கு தொலைபேசியில் அழைத்து இதை என்னால் நகைச்சுவையாக பார்க்க முடியவில்லை என்று கூறி வருத்தப்பட்டார்.

நடிகர் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு, கே.எஸ்.ரவிக்குமார் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள படம் `கோமாளி’. இந்தப் படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கியிருக்கிறார். `ஹிப் ஹாப் தமிழா’ ஆதி இசைமைத்துள்ள இந்தப் படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்துவிட்ட நிலையில், வரும் 15ஆம் திகதி வெளியாகிறது. இதற்கிடையே படத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது.

16 வருட கோமாவில் இருந்து மீண்ட கேரக்டரில் ஜெயம் ரவி நடிக்க டிரெய்லர் கலகலப்பாக இருந்ததால் ரசிகர்களைக் கவர்ந்த அதே நேரம் ஒரு சர்ச்சைக்கும் உள்ளானது. அதாவது கோமாவிலிருந்து எழுந்து 16 வருடங்கள் கடந்துவிட்டதை நம்பாத ஜெயம் ரவிக்கு டிவியில் “நான் அரசியலுக்கு வருவது உறுதி” என்று ரஜினிகாந்த் கூறும் வீடியோவை டிரெய்லரின் இறுதிக்காட்சியில் போட்டுக்காட்டுவார் யோகி பாபு.

அதைப்பார்த்து ஜெயம் ரவி பதற்றத்துடன் “ஏய், இது 96. யாரை ஏமாத்துறீங்க” என்று கேட்பதுபோல் டிரெய்லர் முடிவடைந்தது. இது சர்ச்சையை ஏற்படுத்த ட்விட்டரில் இது தொடர்பான விமர்சனங்களும் எழுந்தன. #நாளையதமிழகம் ரஜினி என்ற ஹேஷ்டேக்கை இந்திய அளவில் டிரெண்டாக்கினர் ரஜினி ரசிகர்கள்.

இந்த நிலையில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இந்த டிரெய்லரைப் பார்த்துவிட்டு சம்பந்தப்பட்ட காட்சி குறித்து படத்தின் தயாரிப்பாளரிடம் வருத்தம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் முரளி அப்பாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

அதில், “கமல்ஹாசன் இன்று காலை கோமாளி டிரெய்லர் பார்த்தார். அதில் ரஜினி அரசியலுக்கு வருவதைப் பற்றிய விமர்சனத்தை பார்த்தவர் உடனே தயாரிப்பாளருக்கு போன் செய்து இதை என்னால் நகைச்சுவையாக பார்க்க முடியவில்லை என்று கூறி வருத்தப்பட்டார். நட்பின் வெளிப்பாடா…. நியாயத்தின் குரலா….” எனப் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக படத்தின் செய்தியாளர் சந்திப்பில் இந்தக் காட்சி குறித்து பேசிய இயக்குநர் பிரதீப் ரங்கநாதன், “நான் பயங்கர ரஜினி ரசிகன். லிங்கா படத்துக்கு பாலபிஷேகம் பண்ணியிருக்கேன். அந்த அளவுக்கு ஃபேன். ஸோ, ரஜினி சார் அரசியலுக்கு சீக்கிரம் வரணும் என்பதற்காவே அந்தக் காட்சியை வைத்தேன்” என விளக்கம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *