சமூக முரண்பாடுகளை தீர்க்கும் தலைமைத்துவ பயிற்சிக்கு ஆசிரியர்கள் வழி காட்ட வேண்டும்

(UTVNEWS|COLOMBO) – நாட்டில் ஏற்பட்டுள்ள இன முரண்பாடுகளையும் மத முரண்பாடுகளையும் சீர் செய்து, அதனை முடிவுக்கு கொண்டுவரும் துறையாக ஆசிரியத் தொழில் கருதப்படுவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

மன்னார் முருங்கனில் கல்வி அமைச்சினால் அமைக்கப்படுள்ள ஆசிரிய தொழில் சார் வாண்மை நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் (09) பிரதம அதிதியாக அமைச்சர் கலந்து கொண்டார்.

அவர் கூறியதாவது, இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளும் மதங்களுக்கிடையிலான பிரிவினைகளும் பேரின வாத ஒடுக்கு முறைகளுமே நமது நாட்டை நிம்மதி இழக்கச் செய்கின்றது. பொருளாதார வளர்ச்சியை குன்றச்செய்துள்ளது அபிவிருத்தி தடைப்பட்டுள்ளது. தென் கிழக்கு ஆசியாவில் கல்வியில் உச்ச நிலையில் இருக்கும் பெருமை பெற்றுள்ள எமது நாடடில், தற்போதைய பிரிவினைகளால் பின்னோக்கி செல்லக்கூடிய ஆபத்தும் துர்ப்பாக்கியமும் ஏற்பட்டுள்ளது

ஐக்கியத்தையும் சகோதரத்துவத்தையும் இன செளஜன்யத்தையும் மீண்டும் கட்டி எழுப்ப வேண்டிய பொறுப்பும் கடமையும் புனிதமான ஆசிரியப் பணிக்கு நிறையவே இருக்கின்றது. அதிபர்கள் ஆசியர்கள் ஆசிரிய ஆலோசகர்கள் உள்ளடங்கிய இந்த துறையானது மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் பேரதிஷ்டம் கொண்டது. பாடசாலையின் அச்சாணிகளாக அதிபர்களே திகழ்கின்றனர். அவர்கள் திறமையாகவும் முறையாகவும் செயற்படும் போதுதான் கல்வியில் உச்ச நிலை ஏற்படும் அத்துடன் அதிபர்கள் தார்மீக பொறுப்பொன்றை சுமந்து நிற்கின்றனர் இந்த அமானித பொறுப்பை அவர்கள் சரிவர நிறைவேற்ற வேண்டும். கடினமான உழைப்பும் நேர்மையான செயல்பாடும் ஆசிரியர்களையும் மாணவர்களையும் அரவணைத்து செல்லும் மனப்பாங்குமே அந்த பாடசாலையின் கல்வி நிலையை மேம்படுத்தும் பாரபட்சமற்ற தன்மையும் திறமைகளை தட்டிக்கொடுக்கும் சுபாவமும் அதிபர்களிடம் இருந்தால் அந்த பாடசாலை கல்வி வளர்ச்சியிலே நல்ல அடைவுகளை ஈட்ட முடியும்.

முருங்கனில் அமைக்கப்பட்டுள்ள இந்த வள நிலையத்துக்கு மூன்று கோடியே அறுபது இலட்சம் செலவிடப்படுள்ளது. ஆசிரியத் தொழில் சார்ந்தவர்களின் ஆற்றல்களையும் திறமைகளையும் வளப்படுத்துவதற்கு இது உதவும். எனவே சரியான முறையில் இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும். இந்த அரசாங்கம் கல்வி வளர்ச்சிக்காக இன மத பேதமின்றி திட்ட்ங்களை முன்னெடுத்து வருகின்றது. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இந்த மாவட்ட மாணவர்களின் கல்வி செயற்பாட்டுக்கு ஆசிரியர்களாகிய நீங்கள் பல்வேறு அர்ப்பணிப்புகளை செய்ய வேண்டும் பாடசாலை கல்வித் தேவைகளையும் பெளதீக வள தேவைகளையும் இனங்கண்டு எம்மிடம் தந்தால் கடந்த காலங்களை போன்று தொடர்ந்தும் உதவ நாம் காத்திருக்கின்றோம்

இந்த நிகழ்வில் வலய கல்வி பணிப்பாளர் பிரட்லி, முருங்கன் பங்குத் தந்தை, வட மாகாண சபை முன்னாள் உறுப்பினர் றிப்கான் பதியுதீன், நானாட்டான் பிரதேச சபை தலைவர் பரஞ்சோதி மன்னார் பிரதேச சபை தலைவர் முஜாஹிர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

-ஊடகப்பிரிவு-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *