தன்னையும் கட்சியையும் தூரப்படுத்தும் வகையில் போலியான பிரசாரங்கள் – அப்துல் மஜீத் குற்றச்சாட்டு

(UTV|COLOMBO) – அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வளர்ச்சியில் காழ்ப்புணர்வு கொண்ட சக்திகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு போலியான பிரசாரங்களின் தொடர்ச்சியாகவே தன்னையும் கட்சியையும் தூரப்படுத்தும் வகையில் இன்னொரு பொய்யான செய்தி பரப்பப்பட்டு வருவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினருமான அப்துல் மஜீத் (எஸ்.எஸ்.பி) தெரிவித்தார்.

அண்மைக்காலமாக இந்த நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவது தமக்கு கவலையளிப்பதாகவும் தன்னை மட்டுமல்ல மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தர்களை குறிவைத்து திட்டமிட்டு இந்த தீய பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீனுடன் இணைந்து தாம் கட்சியில் பயணித்து கட்சித் தலைமைக்கும் தனக்கும் இடையே எவ்வித முரண்பாடுகளும் இல்லையெனவும் அவர் மறுப்பு தெரிவித்தார். சமூக வலைத்தளங்களில் இவ்வாறான பரப்புரைகளை பரப்பி, கட்சியின் ஆதரவாளர்களை குழப்பத்தில் ஆழ்த்துவதன் மூலம் கட்சி நடவடிக்கைகளை முடக்கச் செய்ய முடியும் என சிலர் பகல் கனவு காண்கின்றனர். அவர்களின் இந்த நடவடிக்கை ஒரு போதும் வெற்றிளிக்க மாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, அம்பாறை மாவட்டத்தில் குறிப்பாக பொத்துவில் தேர்தல் தொகுதியில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸாவின் வெற்றிக்கான வியூகங்கள் தொடர்பில் தாம் இன்று தலைவர் ரிஷாத் பதியுதீனுடன் கலந்துரையாடியதாகவும் எதிர்வரும் நாட்களில் பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமெனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *