வயதான பெரியவர்களை பாதுகாப்புடன் வீட்டிலேயே விட்டுவரவும் – உதயநிதி

(UTV|COLOMBO) – ரஜினி ரசிகர்கள் மத்தியில், உதயநிதி ஸ்டாலினின் ட்விட்டர் பதிவு கடும் கோபத்தை உண்டாக்கியுள்ளது.

குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்கம், அஸ்ஸாம், உத்தரப் பிரதேசம் உட்பட பல வட மாநிலங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடந்து வருகின்றன. டெல்லியில் உள்ள ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள், உத்தரப் பிரதேசத்தில் உள்ள அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் தீவிரப் போராட்டங்களில் ஈடுபட்டதைத் தொடர்ந்து பொலிசார் அவர்கள் மீது தடியடி நடத்தினர்.

இந்நிலையில், குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிராக நடைபெற்று வரும் போரட்டம் தொடர்பாக ரஜினி, “எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு காண வன்முறை மற்றும் கலவரம் ஒரு வழி ஆகிவிடக் கூடாது. தேசப் பாதுகாப்பு மற்றும் நாட்டு நலனை மனதில் கொண்டு இந்திய மக்கள் எல்லோரும் ஒற்றுமையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் வன்முறை என் மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

ரஜினி ட்வீட் செய்த சில மணிநேரத்திலேயே நடிகரும், திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், “தலைவர் ஸ்டாலின் தலைமையில் 23-ம் திகதி சென்னையில் நடைபெறும் #CAA2019 எதிர்ப்புப் பேரணியில் அனைவரும் பங்கெடுப்போம். உரிமைக்கான போராட்டத்தைக் கண்டு ‘வன்முறை’ என்று அஞ்சும் வசதியான, வயதான பெரியவர்களைச் சரியான பாதுகாப்புடன் வீட்டிலேயே விட்டுவரவும்” என்று தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்தார்.

இந்தப் பதிவு ரஜினி பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. உடனடியாக, இந்தப் பதிவு ரஜினி ரசிகர்களைக் கடுமையாகக் கோபப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து பலரும் உதயநிதிக்கு எதிராகப் பதிவுகளை வெளியிட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *