(UTV | கொழும்பு) –முன்னணி உள்நாட்டு பாலுற்பத்தி நிறுவனமான Pelwatte, இலங்கை பாலுற்பத்தித் துறையில் தன்னிறைவை அடையும் பொருட்டு தொடர்ச்சியான ஆய்வுகளை முன்னெடுப்பதாக உறுதியளித்துள்ளது. கொவிட்-19 இன் பின்னர் இலங்கையானது அனைத்து விவசாய மற்றும் உணவுப் பொருட்களில் தன்னிறைவு மட்டத்தை அடைவது தொடர்பில் அரசாங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது, Pelwatte தமது அர்ப்பணிப்பு, கொவிட் 19 நிலை மற்றும் அதன் பின்னரான காலப்பகுதியில் பாலுற்பத்திப் பொருட்களை தொடர்ச்சியாக வழங்குவதன் நடைமுறைச் சாத்தியத்தை சுட்டிக்காட்டியது.
இலங்கை அரசாங்கத்தால் 2020 மார்ச் 20 முதல் அமுல்படுத்தப்பட்ட தொடர்ச்சியான ஊரடங்குச் சட்டம் மற்றும் பிற நிச்சயமற்ற நடவடிக்கைகளைத் தொடர்ந்து, அத்தியாவசியமற்ற பொருட்கள் மற்றும் சில வகையான உணவுப் பொருட்களின் இறக்குமதிக்கு தொடர்ச்சியான கட்டுப்பாட்டை விதிப்பதாக அரசாங்கம் அறிவித்தது. அந்த வகையில், அனைத்து விவசாய மற்றும் உணவுப் பொருட்களிலும் தன்னிறைவை உறுதி செய்வதற்கான பொறிமுறைகள் குறித்து விரிவான ஆய்வை மேற்கொள்ள இலங்கை அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கும் பொருட்டு உள்ளூர் உணவு மற்றும் பாலுற்பத்தி நிறுவனங்கள் தமது திட்ட அறிக்கைகள், யோசனைகள் மூலம் பங்களிப்பு செய்வதும், குறுகிய காலப்பகுதியில் இந்த சவாலை வெற்றிகொள்வதும் காலத்தின் தேவையாக இருந்தது. அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, Pelwatte நிறுவனம் இலங்கையில் பாலுற்பத்தித் துறையானது தன்னிறைவை அடைய வழிகோலும் உள்ளூர் பால் விவசாயிகளை மேம்படுத்துவது தொடர்பில் முக்கியமான தகவல்களை முன்வைத்தது.
“தற்போது, எங்கள் விவசாயிகள் தங்கள் மூல பாலுக்கான சிறந்த விலை / பண்ணை வாயில் விலைகள் மூலம் நன்மையடைவதை நாங்கள் உறுதிசெய்கிறோம், எனினும் எம் நிறுவனமும், உள்நாட்டு பாலுற்பத்தித் துறையும் நுண் நிதி ஊடாக விவசாய நிறுவனங்களை மேம்படுத்தும் மேலதிக ஆதரவை வழங்கும் நிலையில் இல்லை. இது எமது அரசாங்கத்தின் ஆதரவு தேவைப்படும் ஒரு பகுதியாகும், ஏனெனில் இது பால் தொழிலில் நீண்டகால தன்னிறைவை ஸ்தாபிப்பதில் ஒரு பெரிய முன்னேற்றமாக இருக்கும். இத்தகைய முயற்சியானது அதிக விளைச்சல் தரும் புல், தீவனம் மற்றும் செறிவூட்டப்பட்ட தீனி ஆகியவற்றால் கால்நடைகளின் தீவனம் / உணவை மேம்படுத்துவதோடு, தட்ப வெப்பநிலைக்கு பழக்கப்படுத்தப்பட்ட, பூர்வீக மற்றும் பிராந்திய இனங்களின் மூலம் தமது மந்தையின் அளவை அதிகரிக்கும் கன்று ஈனாத இளம் பசுக்களை விவசாயிகள் பெற்றுக்கொள்ளவும் வழிவகுக்கும்,” என Pelwatte Dairy Industries இன் முகாமைத்துவ பணிப்பாளர் அக்மால் விக்ரமநாயக்க தெரிவித்தார்.
“உள்ளூர் பால் பதப்படுத்துநர்கள் தங்கள் தயாரிப்புகளின் தரம் மிக உயர்ந்தது என்பதனையும், இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை விட புதியது என்பதனையும் காலத்துக்கு காலம் மீண்டும் காட்டியுள்ளனர். எமது தயாரிப்புகள் 72 மணித்தியாலத்துக்கும் குறைவான நேரத்தில் பண்ணை வாயிலிலிருந்து, சில்லறை விற்பனை நிலையங்களை சென்றடைவதற்கு நாம் உத்தரவாதம் அளிப்பதோடு, இறக்குமதி செய்யப்பட்ட வர்த்தகநாமங்களால் இதனை மேற்கொள்ள முடியாது. கொவிட் – 19 நெருக்கடி காலப்பகுதியில், பிரஜைகள் தாமாகவே உள்நாட்டு வர்த்தகநாமங்களை உபயோகப்படுத்துவதில் உறுதியாகவுள்ளனர். ஆனால், அனைத்து பிரஜைகளுக்கும் புதிய உள்நாட்டு பாலுற்பத்திகள் கிடைப்பதை உறுதிசெய்வதற்கும், போதுமான அளவு தயாரிப்புகளை தொடர்ந்து விநியோகிக்க வேண்டியமையும் உள்நாட்டு வர்த்தக நாமங்கள் எதிர்நோக்கியுள்ள சவால் என்பதுடன் எங்கள் விநியோகச் சங்கிலியின் வெற்றி மற்றும் சிறிய பண்ணை விவசாயிகளின் நிலைபேறான வளர்ச்சியிலேயே இது தங்கியுள்ளது,” என விக்ரமநாயக்க மேலும் தெரிவித்தார்.
சரியான சமநிலையில் அதிக சக்தி கொண்ட தீவனத்தை கால்நடைகளுக்கு வழங்குகின்றமையானது, இரண்டு மாத குறுகிய காலப்பகுதியில் பசுவொன்றிலிருந்து நாளாந்தம் கறக்கும் பாலை 50% வரையில் அதிகரிக்க பிரதான காரணமென Pelwatte அடையாளம் கண்டுள்ளது. இது சிறிய பாற்பணை விவசாயிகள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்களில் ஒன்றென்பதனால், இது தொழில்துறையின் தன்னிறைவில் ஒரு தற்செயலான நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.
தன்னிறைவை நோக்கிய பயணத்தின் முதற்படியாக, இலங்கை அரசாங்கம் உள்ளூர் பாலுற்பத்தித் துறைக்கு விலை அதிகரிப்பை வழங்கியுள்ளது. இதன் பிரகாரம், 2020 ஏப்ரல் 28 இலிருந்து 1 கிலோ கிராம் முழு ஆடைப் பால் மாவின் புதிய விலை ரூபா. 945 ஆகவும் 400 கிராமின் விலை ரூபா. 380 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது முன்னைய நிலையின் கீழ் தம்மால் சமநிலைப் புள்ளியைக் கூட அடைய முடியவில்லை என உள்நாட்டு பால் மா உற்பத்தியாளர்களின் கோரிக்கைக்கு அடிப்படையில் அமைந்ததாகும். இது உள்நாட்டு பாலுற்பத்தியாளர்களை, விநியோகச் சங்கிலி அடிப்படையில், உதாரணமாக, விவசாயிகளின் வலையமைப்பு விரிவாக்கம் போன்றவற்றில் சங்கடமான நிலைக்கு தள்ளுகின்றது. இதற்கிணங்க, பதப்படுத்துநர்கள் இலாபம் ஈட்டவும், அந்த இலாபத்தை சிறிய பண்ணை விவசாயிகளின் வலையமைப்பை விரிவுபடுத்த உதவும் வகையிலும் மொத்த சில்லறை விலையை அதிகரிக்க அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
பொது முகாமையாளர் லக்சிறி அமரதுங்கவின் கருத்தின் படி,அதிகரிக்கப்பட்ட மொத்த சில்லறை விலையின் மூலமாக சரியான விலையை ஸ்தாபிக்கும் அரசாங்கத்தின் முயற்சியானது, கால்நடைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும், உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கும், நிதிசார் வழிகள் இல்லாத 90% சிறு பண்ணை விவசாயிகளைக் கொண்ட விநியோகச் சங்கிலியில் மறு முதலீடு செய்யவும் அவர்களுக்கு உதவும். இந்த விவசாயிகளில் பெரும்பாலானோர் காலாவதியான விவசாய மற்றும் கால்நடை வளர்ப்பு முறைகளைப் பயன்படுத்துகின்றமை குறைந்த உற்பத்தித்திறனுக்கு பங்களிக்கும் காரணியாகும்.
“மொத்த சில்லறை விலை உயர்வின் விளைவாக அதிகரித்த இலாப எல்லையைப் பயன்படுத்தி ஒவ்வொரு விவசாயிகளின் உற்பத்தித்திறனையும் குறைந்தபட்சம் 10% உயர்த்த திட்டமிட்டுள்ளோம். எண்ணிக்கையைப் பொறுத்தவரை, இது 12 முதல் 18 மாதங்களுக்குள் பால் சேகரிப்பில் 100% அதிகரிப்பைக் குறிக்கிறது. எனவே, இது Pelwatte உள்ளிட்ட உள்நாட்டு பாலுற்பத்தி நிறுவனங்கள் சந்தைப் பங்கை மேலும் அதிகரிக்கவும், பால் பொருட்களின் இறக்குமதியைக் குறைக்கவும் உதவும். வேறு விதமாக சொல்வதென்றால், வெளிநாட்டு இறக்குமதியைக் குறைப்பதற்கு நாம் பங்களிப்புச் செய்வோம். அமெரிக்க டொலர் ஒன்றுக்கான ரூபாயின் பெறுமதி ரூபா.200 ஆக வீழ்ச்சியடைந்துள்ளமையைக் கருத்தில் கொள்ளும் போது இதனை சிறந்த காலப்பகுதியாகக் கூற முடியும். எனவே, நாட்டினால் தொடர்ச்சியாக இறக்குமதி செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் மற்றும் பாலுற்பத்திப் பொருட்களை கொள்வனவு செய்வது சாத்தியமில்லை என்பது வெளிப்படையாகத் தெரிவதுடன், ஒரே சீரான தன்னிறைவை அடைவதற்கான சாத்தியக்கூறுகளின் மீது நாம் கவனம் செலுத்துவதற்கு ஏற்ற நேரம் இதுவாகும்,” என அமரதுங்க மேலும் தெரிவித்தார்.
முன்னர் எப்போதையும் விட பல தொழில்களில் உள்நாட்டு உற்பத்தியை வலுப்படுத்த வேண்டிய தேவையை கொவிட்- 19 ஏற்படுத்தியுள்ளது. பாலுற்பத்தித் துறையின் தற்போதைய சூழல் என்னவெனில், உள்ளூர் பால் தேவையின் மூன்றில் இரண்டு பங்கு, இறக்குமதி செய்யப்பட்ட பால் மாவின் மூலமே பூர்த்தி செய்யப்படுகிறது. இலங்கையில் ஒவ்வொரு ஆண்டும் 400 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிக செலவீனத்தில், 100,000 மெட்ரிக் டொன் பால் மா இறக்குமதி செய்யப்படுகிறது. இது போன்றவைக்கு எதிராக ஒரு வலுவான அடித்தளத்தை இடாவிட்டால், இந்த செலவீனத்தின் சுமை உள்நாட்டு பொருளாதாரத்தில் பல மட்டங்களில் உணரப்படும். இலங்கை பாலுற்பத்தி துறையானது பால் மா மட்டுமல்லாமல் பிரஷ் மில்க், பட்டர், சீஸ், ஐஸ்கிரீம் மற்றும் பிற பெறுமதி சேர்க்கப்பட்ட பாலுற்பத்திப் பொருட்களுக்கான தேவைகளையும் பூர்த்தி செய்யும் திறனைக் கொண்டதென உள்நாட்டு பாலுற்பத்தி நிறுவனம் என்ற வகையில் Pelwatte, நம்புகின்றது. எனவே Pelwatte மற்றும் மீதமுள்ள உள்நாட்டு பாலுற்பத்தி துறையினரும் இலங்கையில் தன்னிறைவடைந்த பாலுற்பத்தி தொழிற்துறையை நிறுவுவதற்கான இலங்கை அரசாங்கத்தின் முயற்சியுடன் முழு மனதுடன் கைகோர்த்துக் கொள்வார்கள்.
Pelwatte Dairy Industries தொடர்பில்,
Pelwatte Dairy Industries Ltd, நாடு முழுவதும் சிறந்த தரமான பால் பொருட்களின் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் ஈடுபட்டுள்ள ஒரு வேகமாக வளர்ந்து வரும் நிறுவனமாகும். இத்துறையில் முக்கிய சக்தியாக வளர்ந்து வரும் பொருட்டு இந்நிறுவனம் வேகமாக வளர்ந்து வருவதுடன், வளர்ச்சிக்கான பகுதிகளையும் அடையாளம் கண்டுள்ளது. Pelwatte Dairy Industries Ltd, சர்வதேச தரமான பால் தயாரிப்புகளை உற்பத்தி செய்வதில் ஈடுபட்டுள்ளதுடன், முதன்மையான Pelwatte வர்த்தக நாமம், எங்கள் வலிமை மற்றும் ஊக்கத்தின் ஆதாரமாக இருக்கும் வாடிக்கையாளர்களின் முழுமையான நம்பிக்கையை பெற்றுள்ளது.