(UDHAYAM, COLOMBO) – எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய ‘பாகுபலி 2′ படத்தில் கட்டப்பா என்ற கேரக்டரில் நடித்துள்ள சத்யராஜ், கன்னட மக்களின் மனதை புண்புடும்படி கடந்த ஒன்பது வருடங்களுக்கு முன் பேசியதால், அவர் மன்னிப்பு கேட்கும் வரை கர்நாடகாவில் பாகுபலி 2 படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம்’ என்று கன்னட அமைப்புகள் கூறி வந்தன. இந்த நிலையில் நடிகர் சத்யராஜ் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
ஒன்பது வருடங்களுக்கு முன்னர் காவிரி நதிநீர் பிரச்சனையின்போது கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டனர். அந்த சமயத்தில் கர்நாடகாவில் தமிழ் திரைப்படங்கள் திரையிட எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனை கண்டித்து தமிழ் திரையுலகம் சார்பில் நடைபெற்ற கண்டனக்கூட்டத்தில் பலரும் ஆவேசமாக பேசினர். அவர்களில் நானும் ஒருவன்.
அந்த கண்டனக்கூட்டத்தில் நான் பேசிய சில வார்த்தைகள் கன்னட மக்களின் மனதை புண்படுத்தியதாக அறிகிறேன். நான் கன்னட மக்களுக்கு எதிரானவன் அல்ல. 35 ஆண்டுகளாக என்னுடைய உதவியாளராக இருக்கும் திரு சேகர் என்பவரின் தாய் மொழி கன்னடம். கடந்த ஒன்பது வருடங்களில் ‘பாகுபலி’ உள்பட சுமார் 30 திரைப்படங்கள் கர்நாடகாவில் வெளியாகியுள்ளது. அப்போதெல்லாம் எந்த பிரச்சனையும் வரவில்லை. ஒருசில கன்னட படத்தில் நடிக்க அழைப்பும் வந்தது. ஆனால் நேரமின்மை காரணமாக நடிக்க முடியவில்லை.
ஒன்பது வருடங்களுக்கு முன்னர் நடந்த கண்டன கூட்டத்தில் நான் பேசியதை தற்போது பார்த்து நான் பேசிய சில வார்த்தைகள் கன்னட மக்களின் மனம் புண்படுத்தியதாக கருதுவதால் அந்த சில வார்த்தைகளுக்காக ஒன்பது வருடங்களுக்கு பின்னர் நான் கன்னட மக்களிடம் எனது மனப்பூர்வமான வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன். இந்த முடிவால் என நல விரும்பிகளும் தமிழக மக்களும் வருத்தம் கொள்ள வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன்.
பாகுபலி என்ற மிகப்பெரிய படத்தின் மிகச்சிறிய தொழிலாளிதான் நான். என் ஒருவனால் பல ஆயிரம் தொழிலாளிகளின் உழைப்பும், பணமும் விரயமாவதை நான் விரும்பவில்லை. பாகுபலி 2 படத்தின் கர்நாடக மாநில உரிமையை பெற்ற விநியோகிஸ்தர்களும், திரையரங்க உரிமையாளர்களும் பாதிக்கப்படுவதை நான் விரும்பவில்லை.
ஆனாலும் இனிவரும் காலங்களில் தமிழின மக்களின் பிரச்சனையாக இருந்தாலும் சரி, காவிரி நதிநீர் பிரச்சனையாக இருந்தாலும் சரி, விவசாயிகள் பிரச்சனையாக இருந்தாலும் சரி தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்று உறுதி கூறுகிறேன். இந்த சத்யராஜை வைத்து படமெடுத்தால் எதிர்காலத்தில் தொல்லைகள் வரும் என்று நினைக்கும் தயாரிப்பாளர்கள் தயவுசெய்து என்னை ஒப்பந்தம் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால் ஒரு நடிகனாக இருப்பதை விட, இறப்பதைவிட எந்தவிதமான மூட நம்பிக்கையும் இல்லாத ஒரு தமிழனாக இருப்பதும், இறப்பதும்தான் எனக்கு பெருமை மற்றும் மகிழ்ச்சி.
எனது மனப்பூர்வமான வருத்தத்தை ஏற்றுக்கொண்டு பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தை வெளியிட ஒத்துழைக்குமாறு கன்னட மக்களை கேட்டுக்கொள்கிறேன்.