28 வருடங்களின் பின்னர் ஏற்றுமதி அபிவிருத்தி சபை ஒன்றுகூடல்

(UTV | கொழும்பு) – ஏற்றுமதி அபிவிருத்தி சபை 28 வருடங்களின் பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஒன்றுகூடியது.

ஏற்றுமதி அபிவிருத்தி சபையை மீள செயற்படுத்திஇ முதலாவது சந்திப்பு நேற்று (23) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

அரச மற்றும் தனியார் துறைகளில் ஏற்றுமதி துறையை அபிவிருத்தி செய்து சர்வதேச சந்தையை வெற்றிகொண்டு மக்கள்மைய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதை விரைவுபடுத்துவது இச்சபையின் விடயப்பரப்புக்கு உட்பட்டதாகும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

துறையின் பிரச்சினைகளை தீர்த்து மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மீளாய்வு செய்யும் வகையில் ஏற்றுமதி அபிவிருத்திச் சபை மாதத்திற்கு ஒரு தடவை ஒன்றுகூட வேண்டுமென முன்மொழியப்பட்டது.

ஏற்றுமதித் துறையில் பிரச்சினைகளை தீர்த்தல் மற்றும் அதன் முன்னேற்றத்திற்காக தேசிய வர்த்தக கொள்கையை விரைவாக மீளாய்வு செய்து புதுப்பிக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

விவசாயிகளின் ஆரம்ப உற்பத்திகளை ஏற்றுமதி சந்தைகளுக்கு பொருத்தமான வகையில் மேம்படுத்துவதற்காக ஏற்றுமதி உற்பத்தி கிராமங்களை உருவாக்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்திகளுக்குத் தேவையான மூலப்பொருட்களை இறக்குமதி செய்வது உயர் தரத்துடனும் சிறந்த கண்காணிப்புடனும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

உலக சந்தையில் சுதேச உற்பத்திகளை ஊக்குவிப்பதற்கும் முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கும். ஊக்கத்துடன் செயற்படுமாறு தான் தனிப்பட்ட முறையில் தூதுவர்களுக்கு அறிவுறுத்தியிருப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

விமான நிலைய வசதிகளை விரிவுபடுத்தி வர்த்தகர்களையும் முதலீட்டாளர்களையும் கவரும் வகையில் சிறந்த சூழலை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *