நடிகர் சசி கபூர் காலமானார்

(UTV|COLOMBO)-பிரபல ஹிந்தி நடிகர் சசி கபூர் தனது 79வது வயதில் மும்பையில் வைத்து நேற்று  காலமானார்.

18-3-1938 அன்று கொல்கத்தா நகரில் பிறந்த சசி கபூர், புகழ்பெற்ற பாலிவுட் திரைப்பட நடிகரும் தயாரிப்பாளரும் ஆவார். ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நாடகங்களிலும், புராணப் படங்களில் நடிக்க தொடங்கிய சசிகபூர் படிப்படியாக முன்னேறி ஹிந்திப் பட கதாநாயகனாகவும், இணை நாயகனாகவும், குணசித்திர கதாபாத்திரங்களிலும் சுமார் 175 படங்களில் நடித்துள்ளார்.

பாலிவுட்டில் கோலோச்சும் கபூர் குடும்பத்தில் திரைப்பட மற்றும் நாடக நடிகர் பிரித்விராஜ் கபூரின் மகனும் ராஜ் கபூர் மற்றும் சம்மி கபூருக்கு இளையவரும் ஆன இவர், பிரித்தானிய நடிகை ஜென்னிபர் கெண்டலைத் திருமணம் புரிந்தார்.

இவரது வாரிசுகளான கரண் கபூர், குணால் கபூர் மற்றும் சஞ்சனா கபூர் ஆகியோரும் கலைத்துறையில் நாட்டம் கொண்டு சாதனை படைத்துள்ளனர்.

அமிதாப் பச்சனுக்கு இணையாக இவர் நடித்த ஹிந்தித் திரைப்படங்கள் தீவார், தோ அவுர் தோ பாஞ்ச், நமக் ஹலால் ஆகியன இவருக்கு பெரும் புகழை ஈட்டித் தந்தன.

தவிர பல பிரித்தானியப் படங்களிலும் “சேக்ஸ்பியர்வாலா” போன்ற மெர்ச்சென்ட் ஐவரி தயாரித்த ஆங்கிலப் படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

பாலிவுட் திரையுலகில் நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என்று பல்முனைகளில் பணியாற்றியவர் சசி கபூருக்கு கடந்த 2015-ம் ஆண்டுதாதா சாஹேப் பால்கே விருதை இந்திய அரசு வழங்கியது. இந்திய சினிமாவின் வளர்ச்சியில் இவர் ஆற்றிய பங்களிப்புக்காக இவ்விருது வழங்கப்பட்டது.

முன்னதாக 2011-ல் பத்மபூஷன் விருதினை அரசு வழங்கி பெருமைபடுத்தியது. மூன்று முறை தேசிய விருதினையும், பல ஃபிலிம் பேர் விருதினையும் பெற்றவர். நூற்றுக்கும் மேற்பட்ட ஹிந்திப் படங்களில் நடித்தவர் சசி கபூர் என்பது குறிப்பிடத்தக்கது.

சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த சசி கபூர் மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் நேற்று நெஞ்சு எரிச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

சிகிச்சை பலனின்றி நேற்று  மாலை தனது 79-வது வயதில் அவர் காலமானார். அவரது மறைவுக்கு திரைத்துறை மற்றும் அரசியல் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *