எதிர்கால நன்மை கருதியே பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பாவனை தடைசெய்யப்பட்டுள்ளது

(UTV|COLOMBO)-சுற்றாடல் தினத்தில் மாத்திரமன்றி வருடம் முழுவதும் செயற்படுத்தப்படும் சூழல் பாதுகாப்பு செயற்திட்டத்துடன் இணைந்து சுற்றாடலை பாதுகாப்பதற்கான தமது பொறுப்பினை நிறைவேற்ற அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

வரலாற்று சிறப்புமிக்க கேகாலை நகரிலிருந்து ஜனாதிபதி மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.இதனை தனியொரு தரப்பினருக்கு மாத்திரம் கையளிக்கமுடியாது என்பதுடன், அரசியல்வாதிகள், பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த மக்களும் இதன்பொருட்டு ஒன்றிணைய வேண்டுமென ஜனாதிபதி குறிப்பிட்டார்.

 

கேகாலை நகரில் நேற்று  முற்பகல் இடம்பெற்ற சர்வதேச சுற்றாடல் தின கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

தற்போது இடம்பெறும் சூழல் மாசடைவுகள் எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாக அமையும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, உலகில் அபிவிருத்தி அடைந்த நாடுகள் சூழல் மாசடைதல் தொடர்பில் எதிர்நோக்கியுள்ள நிலைமைகள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தினார்.

 

எனவே, எமது சூழல் கட்டமைப்பினைப் பாதுகாப்பதற்கு தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதுடன், அது எவ்வகையிலும் தவிர்க்கப்பட முடியாத பொறுப்பாகும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

 

பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பாவனை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள புதிய வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள சட்டதிட்டங்கள், நாட்டின் எதிர்கால நன்மை கருதியே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. எனினும் அத் தீர்மானங்களை மேற்கொள்வதற்கு ஏற்படுத்தப்பட்ட தடைகள் ஒரு நாடு என்ற வகையில் எமக்கு எதிர்நோக்க நேர்ந்த துர்ப்பாக்கியமான நிலைமையாகும் எனவும் தெரிவித்தார்.

 

நிர்மாணத் துறைக்கு தேவையான கல், மண், மணல் ஆகியவற்றை பெற்றுக்கொள்வதனால் சூழல் கட்டமைப்புக்கு ஏற்படும் தாக்கங்கள் தொடர்பாக இதன்போது சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அபிவிருத்தி செயற்திட்டங்கள் நாட்டிற்கு முக்கியமாகும் என்பதனால் அதற்கான மூலப்பொருட்களை பெற்றுக்கொள்வதற்கான மாற்று வழிகளை இனங்காண வேண்டியதன் முக்கியத்துவத்தையும் தெளிவுபடுத்தினார்.

 

இதனிடையே கடத்தல் மற்றும் ஊழல்மிக்க வர்த்தக செயற்பாடுகளினால் சூழல் கட்டமைப்பு பாதிக்கப்படுவது மாத்திரமன்றி கடந்த சில வருடங்களாக உயிரிழப்புக்களும் ஏற்பட்டுள்ளன எனவும் ஜனாதிபதி இதன்போது நினைவுகூர்ந்தார்.

 

மனிதர்கள் உள்ளிட்ட சகல உயிரினங்களின் பாதுகாப்பும் இருப்பும் தங்கியுள்ள சுற்றாடலின் முக்கியத்துவத்தை எடுத்தியம்பும் சர்வதேச சுற்றாடல் தினத்தை முன்னிட்டே இந்த சுற்றாடல் தின கொண்டாட்டங்கள் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

 

‘முறையற்ற பிளாஸ்டிக் பாவனையினால் ஏற்படும் சுற்றாடல் மாசடைவினை தடுப்போம்’ எனும் தொனிப்பொருளில் இவ்வருட சுற்றாடல் தினம் கொண்டாட்டங்கள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

மரக்கன்றினை நாட்டி சர்வதேச சுற்றாடல் தின தேசிய வைபவத்தினை ஜனாதிபதி ஆரம்பித்து வைத்தார்.

 

கேகாலை மாவட்ட சுற்றாடல் பற்றிய விபரங்கள் அடங்கிய புத்தகமும் கொழும்பு, காலி, திருகோணமலை மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய பிரதான துறைமுகங்களில் இடம்பெறும் உயிர்ச்சூழல் தரவுகளை சேகரிக்கும் ஆய்வறிக்கையும் இதன்போது வெளியிடப்பட்டன.

பொத்துவில் பிரதேசத்தில் 106 ஹெக்டேயர் பரப்புடைய மணல்மேட்டுப் பிரதேசத்தை பாதுகாக்கப்பட்ட பிரதேசமாக பிரகடனப்படுத்தல், அம்பாறை மாவட்ட சாஸ்திரவெல வனத்தின் கண்டல் தாவர பிரதேசத்தை பாதுகாக்கப்பட்ட வனமாக பிரகடனப்படுத்தல் மற்றும் மாத்தளை மாவட்ட உக்குவெல பிரதேச செயலாளர் பிரிவின் பன்சல்தென்ன நீரூற்றுப் பிரதேசத்தை சூழலியல் பாதுகாப்பு பிரதேசமாக பிரகடனப்படுத்தல் உள்ளிட்ட நிகழ்வுகளும் இதன்போது இடம்பெற்றன.

பிரதேச கழிவு முகாமைத்துவ நடவடிக்கைகளுக்கு தேவையான வசதிகளை வழங்குதல், பாடசாலை மாணவர்களுக்கு பழச்செடிகள் விநியோகித்தல் மற்றும் சுற்றாடல் தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு விருது வழங்குதலும் இதன்போது இடம்பெற்றன.

 

இந்நிகழ்வில் பிரதேச மகாசங்கத்தினர் உள்ளிட்ட சர்வ மதத் தலைவர்களும் அமைச்சர்களான ரஞ்சித் சியம்பளாபிட்டிய, கபிர் ஹாசிம், ரவுப் ஹக்கிம், இராஜாங்க அமைச்சர்களான வீரகுமார திசாநாயக்க, ஸ்ரீயானி விஜேவிக்கிரம, பிரதி அமைச்சர் துஷ்மந்த மித்ரபால, சப்ரகமுவ மாகாண ஆளுநர் நிலுக்கா ஏக்கநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் துசிதா விஜேமான்ன உள்ளிட்ட பிரதேச அரசியல் பிரதிநிதிகளும் அரச அதிகாரிகள், அதிபர்கள், பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பெருந்தொகையானோர் கலந்துகொண்டனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *