(UTV|COLOMBO)-யாழ். பல்கலைக்கழக ஊடகக்கற்கைகள் நடாத்தும் ‘இருளென்பது குறைந்த ஒளி’ என்னும் கருப்பொருளிலான ஒளிப்படக் கண்காட்சியும், விவரணப்படங்கள் திரையிடலும் இடம்பெறவுள்ளது.
யாழ். பல்கலைக்கழகத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை (18) காலை 9.30க்கு ஆரம்பமாகவுள்ள இந்தக் கண்காட்சியில் ஊடகக் கற்கை நெறி பயிலும் மாணவர்களால் தேர்வுசெய்யப்பட்ட நூற்றுக்கும் அதிகமான ஒளிப்படங்கள் இடம்பெறவுள்ளன.
இந்த ஒளிப்படங்கள் யாவும் இயற்கை ஒளியமைப்பைப் பயன்படுத்தியே பதிவுசெய்யப்பட்டவை என்பதுடன், மக்களின் பண்பாடு, பொருளியல், சமூக வாழ்க்கை, சுற்றுச் சூழல் என்பவை இவற்றின்வழி வெளிக்கொண்டுவரப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஊடகக் கற்கைகள் மாணவர்களால் உருவாக்கப்பட்ட விவரணப் படங்களும் இந்த நிகழ்வில் திரையிடப்படவுள்ளன.
யாழ்ப்பாணத்தின் ஒரேயொரு நன்னீர் ஆறென அமைந்திருக்கும் வழுக்கையாறு, யாழ். சமூகத்தில் மூன்றாம் பாலினத்தவர்களின் சவால்களை அடையாளம் காட்டும் ‘நாங்களும் இருக்கிறம்’, போரின் பாதிப்புக்களில் இருந்து மீண்டெழும் இரு கால்களும் இழந்த குடும்பஸ்தர் ஒருவரின் கதையைச் சொல்லும் ‘முனை’, மீள் குடியமர்வு கிராமம் ஒன்றை விபரிக்கும் ‘ஏ 9’, பார்த்தீனியம் என்கின்ற விஷச்செடியின் அபரிதமான பரவுகைபற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் ‘காளச் செடி’, கடல் நீரை நன்னீராக்கும் திட்டத்தை எதிர்த்து கடற்றொழிலை மேற்கொள்ளும் மக்களும், கரையோரப் பகுதியில் வாழக்கூடிய மக்களும் இணைந்து முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தின் அடிப்படையில் உருவான ‘கடலே எங்கள் மூச்சு’, யாழ்ப்பாணத்திலுள்ள யாசகம் பெறுவோரை மையப்படுத்திய ‘மாற்றத்தைத் தேடி’, மக்களை மீளக் குடியேற்றம் செய்ததன் பின்னர் அவர்களது அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கான உதவிகள் சரிவரக் கிடைக்கப்பெறாமையால் சிரமப்படும் வயதான கணவன் – மனைவியை மையப்படுத்திய ‘ஏதிலி’ ஆகிய விபரணப்படங்கள் திரையிடப்படவுள்ளன.
இந்த நிகழ்வின் இன்னுமொரு அங்கமாக, மாலை 4.00 மணிக்கு கைலாசபதி கலையரங்கில் ஊடகக்கற்கைகள் மாணவர்களின் சஞ்சிகையான ‘கனலி’யும் வெளியிட்டு வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]