ராஜபக்ஸ ஆட்சிக்காலத்தின் நிறைவில் கடன் சுமை 44.8 பில்லியன்

(UTV|COLOMBO)-2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்திற்காக மஹிந்த ராஜபக்ஸவிற்கு 7.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நிர்மாணித்த China Harbour நிறுவனம் வழங்கியதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.

இந்த நிறுவனம் ஹம்பாந்தோட்டை துறைமுக திட்டத்திற்காக Standard Chartered வங்கியில் பேணிய கணக்கின் ஊடாக பணத்தை வழங்கியுள்ளது.

அதிகாரிகளுக்கு இலஞ்சம் வழங்கியமை மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளினால் பங்களாதேஷ் மற்றும் பிலிபைன்ஸ் ஆகிய நாடுகளில் சீனாவின் குறித்த நிறுவனம் தற்போது தடை செய்யப்பட்டுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ஸ ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் நிர்மாணப் பணிகளுக்காக முதலில் இந்தியாவிற்கு அழைப்பு விடுத்திருந்த போதிலும், அவர்கள் அதனை நிராகரித்தமையினால் உயர் வட்டி வீதத்தில் கடும் நிபந்தனைகளுக்கு மத்தியில் சீனாவிடம் இருந்து கடன் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முதலில் 307 மில்லியன் டொலர் கடன் பெறப்பட்டுள்ளதுடன், அதற்காக நூற்றுக்கு 2 வீதத்திற்கும் அதிக வட்டியை செலுத்த வேண்டியுள்ளது.

அந்த கடனை ஜப்பானில் இருந்து பெறுவதாக இருந்தால் 0.5 ற்கும் குறைவான வட்டி வீதத்தில் பெற்றிருக்க முடியும் என நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

சீனா அதிக வட்டி வீதத்தில் கடன் வழங்கியுள்ளதுடன், நிர்மாணப் பணிக்கான ஒப்பந்தத்தை China Harbour நிறுவனத்திற்கு வழங்க வேண்டும் என நிபந்தனை வழங்கியுள்ளது.

2010 ஆம் ஆண்டில் தனது 65 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடிய போது, அதே தினத்தில் வைபவ ரீதியாக ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை திறக்க வேண்டிய தேவை மஹிந்த ராஜபக்ஸவிற்கு இருந்தமையால், சீன தொழிலாளர்களை ஈடுபடுத்தி இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

முதற்கட்ட நிர்மாணப் பணிகளை நிறைவு செய்ததன் பின்னர், துறைமுக நுழைவாயிலில் பாரிய கல் ஒன்று இருந்தமை அடையாளம் காணப்பட்டமையால் அதனை அகற்றுவதற்கு 40 மில்லியன் டொலர் மேலதிகமாக செலவிடப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை துறைமுகத் திட்டத்தினை விஸ்தரிப்பதற்காக மஹிந்த ராஜபக்ஸ நிர்வாகம் 2012 ஆம் ஆண்டு சீனாவில் இருந்து மீண்டும் 757 மில்லியன் டொலர் கடன் பெற்றுள்ளது. அக்கடன் முதல் கடன் தொகையை விட 6.3 வீதம் அதிக வட்டி வீதத்தில் பெறப்பட்டுள்ளது.

இந்த வட்டி வீதம் நிலையான முறையில் வழங்கப்பட வேண்டும் என்ற நிபந்தனைக்கும் ராஜபக்ஸ அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

ராஜபக்ஸ ஆட்சிக்காலத்தின் நிறைவில் 44.8 பில்லியன் கடன் சுமை ஏற்பட்டுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு மாத்திரம் இலங்கை 4 .68 பில்லியன் டொலர்களை தவணைக் கடனாக செலுத்த வேண்டி இருந்தது.

மத்திய வங்கியின் அறிக்கைகளின் படி கடந்த வருடம் இலங்கை சீனாவிற்கு 3 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்த வேண்டிய போதும், அந்த தொகை 5 பில்லியன் அமெரிக்க டொலரை விட அதிகரிக்கலாம் என பொருளாதார நிபுணர்களை சுட்டிக்காட்டி பத்திரிகை செய்தி வௌியிட்டுள்ளது.

ஏற்கனவே பெற்ற கடனை மீள செலுத்துவதற்காக கடந்த மாதம் இலங்கை, சீன அபிவிருத்தி வங்கியிடம் இருந்து மேலும் ஒரு பில்லியன் டொலரை கடனாகப் பெற்றுள்ளது.

இவ்வாறான கடன் சுமையில் நாடு சிக்கி இருக்கும் பின்புலத்திலே​யே ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருட குத்தகைக்கு வழங்குவதற்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.

சீனா இவ்வாறு கடந்த 10 வருடங்களில் உலகளாவிய ரீதியில் 35 துறைமுகங்களுக்கு பணத்தை முதலீடு செய்துள்ளதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.

அதில் இரண்டு துறைமுகங்கள் இலங்கைக்கு சொந்தமானவை.

ஹம்பாந்தோட்டை துறைமுகம், கொழும்பு துறைமுகத்தின் தெற்கு பகுதி மற்றும் கொழும்பு துறைமுக அபிவிருத்தி திட்டம் என பெயரிடப்பட்ட இந்த திட்டத்துடன் சீனா 5 ஏக்கர் நிலத்தின் உரிமையை முழுமையாக பெற்றுக்கொள்வதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலப்பகுதியில் எவ்வித உரிமையும் இலங்கைக்கு இல்லை எனவும் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிற்கு வழங்குவதனால் அவர்களின் இராணுவ செயற்பாடுகளுக்கும் சந்தர்ப்பம் கிடைப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உடன்படிக்கையின் படி அதற்கு சந்தர்ப்பம் இல்லை என இலங்கை அதிகாரிகள் தெரிவித்தாலும், தெற்கு சீன கடற்பகுதியின் தீவுகளில் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெறுவதாக உதாரணங்களை சுட்டிக்காட்டி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வௌியிட்டுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *